வெள்ளி, ஜனவரி 13, 2012

முல்லைப் பெரியாறு: கேரளாவின் புதிய ஸ்டன்ட் !


முல்லைப் பெரியாறு: கேரளாவின் புதிய ஸ்டன்ட்!முல்லைப் பெரியாறு அணை கேரள பகுதிக்குள் இருப்பதால் அதனை உடைக்கக் கேரளாவுக்கு முழு அதிகாரம் உண்டு'' என்று, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம் கேரள அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், அணைக்குப் பாதுகாப்பு இல்லை என்றுகூறி புதிய அணை கட்ட கேரளா வலியுறுத்தி
வருகிறது. அதேசமயம், அணைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் அது மிகுந்த பலமுடன் இருப்பதால் புதிய அணை தேவையில்லை என தமிழகம் கூறிவருகிறது.
இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் இருமுறை தமிழகத்தின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அதனைக் கேரளா ஏற்கத்தயாராகாத நிலையில், ஐவர் குழு அடங்கிய கமிட்டி ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

இந்த ஐவர் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நீதிபதி ஆனந்த் தலைமையில் நடந்தது. அப்போது கேரளா சார்பில் புதிய மனு ஒன்று ஐவர் குழு முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

"கேரள பகுதிக்குள்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. எனவே அதை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கேரளாவுக்கு உரிமை உண்டு.

புதிய அணை கட்டிய பின், அதை பாதுகாக்கும் உரிமை கேரளாவுக்கு அளிக்க வேண்டும். அதன் நீர்பங்கீடு பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்க, உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்கலாம். இந்தக் குழு இதற்கான விதிமுறைகளை வகுக்கலாம்.

புதிய அணையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்குப் பங்கீடு செய்யவும் கேரளா தயாராக இருக்கிறது."

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே, புதிய அணை கட்டப்பட்டால் அதனை இரு மாநில அரசுகளும் சேர்ந்து பராமரிக்கலாம் எனக்கூறிய கேரள அரசு, பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி புதிய அணையைக் கேரளா மட்டுமே பராமரிக்கும் எனக்கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் கேரளாவிற்கு எதிராக முடிவு திரும்பும் நிலையில், அவ்வபோது கேரளா புதிய புதிய காரணங்களை முன் வைப்பதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக