திங்கள், ஜனவரி 02, 2012

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்யலாம்-மத்திய அரசு அதிரடி!

டெல்லி: புத்தாண்டு முதல், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினரும் நேரடியாக முதலீடு செய்து பங்குகளை வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள், அறக்கட்டளைகள், பென்சன் நிதியை கையாளும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம்.இதன்மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளில் டாலர்களின்
முதலீடு அதிகரிக்கும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், டாலர்களை அதிகளவில் ஈர்த்தால், ரூபாயின் மதிப்பு சரிவதையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

ஐரோப்பியாவில் நிலவும் பொருளாதார சிக்கல்களால், அந்த நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள அன்னிய நிதியை முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்து வருகின்றனர். அதை டாலர்களில் முடக்கி வருகின்றனர்.

இந் நிலையில், அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும், இந்தியாவுக்குள் டாலர்கள் வருவதை அதிகரிக்கவும் பங்குச் சந்தைகளை வெளிநாட்டினருக்கும் திறந்துவிட்டுள்ளது மத்திய அரசு.

இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய foreign institutional investors எனப்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது தனிப்பட்ட நபர்களும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமான நஷ்டத்தை சந்தித்த பங்குச் சந்தை இந்திய பங்குச் சந்தை தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 1.5 லட்சம் கோடியும் 2011ம் ஆண்டில் முதலீட்டாளர்களால் திரும்ப எடுக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் (current account deficit) 3 சதவீதமாக உள்ளது. போதிய டாலர்கள் இருப்பில் இல்லாததால், இறக்குமதி, ஏற்றுமதிகளைக் கையாளவும் மத்திய அரசு திணறி வருகிறது. இதை சரி செய்ய டாலர்களை நாட்டுக்குள் அதிகளவில் கொண்டு வருவது அவசியம்.

வெளிநாட்டினரை நேரடியாக பங்குச் சந்தைகளில் அனுமதித்தற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக