இன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததில், அந்நாட்டின் அணுவிஞ்ஞானி முஸ்தஃபா அஹமது ரோஷன் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காந்தவிசை கொண்ட வெடிகுண்டை குறிப்பிட்ட பீஜியாட் 405 காரில் பொருத்திவைத்ததாகத் தெரிய வந்துள்ளது.
ஈரானின் அணுவிஞ்ஞானிகளைத் தேடிக்கொல்லும் அமெரிக்க இஸ்ரேல் உளவு ஸ்தாபனங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலும் ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் இதேபோல் கார்குண்டு வெடித்து கொல்லப்பட்டிருந்தனர்.
2010ல் நடைபெற்ற மற்றொரு கொலைமுயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ஃபரீதுன் அப்பாஸி மயிரிழையில் தப்பியிருந்தும் நினைவிருக்கலாம். தன் மனைவியுடன் காரை விட்டு அப்பாஸி இறங்கிய சில விநாடிகளில் அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்திருந்தது.
முஸ்தஃபா அஹ்மது விஞ்ஞானியாகவும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாயுக்களைப் பிரித்தெடுக்க உதவும் பாலிமெரிக் இழைகளின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டுவந்தார்.
அமெரிக்க உளவு நிறுவங்களின் துணை கொண்டு, இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈரானின் விஞ்ஞானிகளை குறிவைத்து அழிப்பதாக ஈரானின் இல்னா செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக