வியாழன், ஜனவரி 05, 2012

கிங்பிஷர், ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பில்லாதவை-விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் எச்சரிக்கை !

மும்பை: கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து வரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தங்களது விமானங்களை போதிய அளவு பராமரிக்காமல் உள்ளதாகவும், இதனால் அந்த விமானங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் எச்சரித்துள்ளது.


டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தின் தலைவரான பரத் பூஷண் மத்திய விமானத்துறையிடம் கொடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

கடும் நிதித் தடுப்பாடு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. அதில் முக்கியமானது விமானங்களின் பராமரிப்பு.

குறிப்பாக கிங்பிஷர் விமான நிறுவனத்தை மூடிவிடுவதே நல்லது. இந்த நிறுவன விமானங்களை இயக்குவது பாதுகாப்பில்லாதது. இந்த நிறுவனத்திடம் உள்ள 64 விமானங்களில் 20 விமானங்கள் தரையிறக்கப்பட்டுவிட்டன. போதுமான உதிரி பாகங்கள் இல்லாதது, என்ஜின்களில் கோளாறு ஆகிய காரணங்களால் அவை இயக்கப்படாமல் உள்ளன.

இந்த நிறுவனத்திடம் உள்ள ஏழு ஏ-320 விமானங்களில் 12 என்ஜின்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. 9 ஏடிஆர் ரக விமானங்களில் 16 என்ஜின்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த என்ஜின்கள், உதிரி பாகங்களை வாங்க முடியாததால், இந்த நிறுவனம் ஒரு விமானத்திலிருந்து சில பாகங்களை எடுத்து அடுத்த விமானத்தில் பொறுத்தி வருகிறது (cannibalisation of parts) இதனால், பல விமானங்களை இயக்க முடியாமல் தரையிறக்கிவிட்டது.

இதனால் குளிர்காலத்தில் அந்த விமான நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சேவைகளில் 175 வழித்தடங்களில் இந்த நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை. போதிய விமானங்கள் இல்லாததும், போதிய உதிரி பாகங்கள் இல்லாததுமே இதற்குக் காரணம்.

அதே போல ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவையைக் குறைப்பதே நல்லது.

அதே போல ஜெட் ஏர்வேஸ், ஜெட் லைட், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்களின் நிதி நிலைமையும் கவலையளிக்கிறது. இன்டிகோ நிறுவனத்தின் அசுர வளர்ச்சியும் கூட கவலைக்குரியதே என்று கூறியுள்ள பூஷண், கிங்பிஷர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பியுள்ளார்.

நிலைமையை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவரிடம் இந்த இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்தாக வேண்டும். இவர்களது பதில் திருப்தியளிக்காவிட்டால், இந்த நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக