ஈரானின் அணுசக்தி தயாரிப்பு குறித்து அமெரிக்காவும், மேற்குலகும் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் பாரசீக மற்றும் ஓமன் வளைகுடாக்களுக்கு இடைப்பட்ட பகுதியான, ஹோர்முஸ் நீரிணையில், 10 நாட்களாக, ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி மேற்கொண்டது. அப்போது மூன்று ஏவுகணைகள் பரிசோதனை மற்றும் அணு உலைகளில் பயன்படும் எரிபொருள் தயாரிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டதாக ஈரான் அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஈரான் இராணுவம் மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம், ஈரான் அணுசக்தி குழுத் தலைவர் பிரைதவுன் அப்பாசி அளித்த பேட்டியில்,"கோம் நகருக்கு அருகில் உள்ள போர்டோ பகுதியில் விரைவில் யுரேனியம் செறிவூட்டும் பணியைத் தொடங்கவுள்ளோம்" என அறிவித்திருந்தார். இந்நிலையில், ஈரான் முக்கிய அதிகாரிகளுக்கு நெருக்கமான 'கைஹான்' பத்திரிகை நேற்று வெளியிட்ட செய்தியில் போர்டோவில் யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கி விட்டதாகவும், அந்தப் பகுதி ஏவுகணைகளால் கூடத் தாக்கப்பட முடியாத பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த பல ஆண்டுகளாக, தான் வைத்திருக்கும் யுரேனியத்தின் 5 சதவீதத்தை மட்டுமே ஈரான் செறிவூட்டியுள்ளது.அதற்கே, அது பல தடைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. தற்போது போர்டோவில் யுரேனியத்தை 20 சதவீத அளவிற்கு செறிவூட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில், ஈரான் இராணுவ துணைத் தளபதி, அலி அஷ்ரப் நூரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை எதிரிகள் தடை செய்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு துளி எண்ணெய் கூட வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது. இதற்கு முன்பும், நீரிணையை மூடப்போவதாக ஈரான் அதிகாரிகள் சிலர் மிரட்டினாலும், அந்நாட்டின் இராணுவ உயர்அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளது இதுதான் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனால் விதிக்கப்பட்டிருந்தாலும், மேலும் பல தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டி வருகிறது. மத்திய கிழக்கின் எண்ணெயை நம்பித் தான் அமெரிக்காவின் எரிசக்தி வளம் இருப்பதால் அதில் கையை வைக்க ஈரான் தீர்மானித்துள்ளதன் அடையாளமாகத் தான் இவ்வாறு மிரட்டியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா தனது எதிரிகளாகக் கருதும் வெனிசுலா, கியூபா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் நேற்று முதல் ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஈரானின் யுரேனிய செறிவூட்டல் அறிவிப்பு, நீரிணையை மூடுவது குறித்த மிரட்டல், அதிபரின் தென்அமெரிக்க பயணம் ஆகியவை அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக