மும்பை: பெரும் கடனில் உள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் சீன வங்கிகளிடமிருந்து ரூ. 6,000 கோடி கடன் வாங்கவுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு விற்ற மாற்றத்தக்க பத்திரங்களை (convertible bonds) வரும் மார்ச் மாதத்தில் அந்த நிறுவனம் திரும்ப வாங்கியாக வேண்டும். இதில் பெரும்பாலனவை வெளிநாட்டு முதலீடுகள் (foreign currency convertible bonds).
இதற்கு பணம் தர ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 5,000 கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால், அனில் அம்பானியின் எல்லா நிறுவனங்களுமே பெரும் கடனில் உள்ளன.
இதனால், இவற்றைத் திரும்ப வாங்க பணம் தேவைப்படும் நிலையில், நிறுவனம் வேறு இடத்தில் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.
முதலில் எல்லாம் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் தனக்கு வேண்டிய அளவு நிதியை இந்திய நிறுவனங்கள் மிக எளிதாக திரட்டி வந்தன. ஆனால், இந்த நாடுகளில் நிலவும் மோசமான நிதி நிலையால், பெரிய அளவில் முதலீடுகள் செய்ய யாரும் தயாராக இல்லை.
இதையடுத்து தனது குழுமத்தின் சில சிறிய நிறுவனங்களை விற்க அனில் அம்பானி முயன்றாலும், வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால் இந்திய வங்கிகளிடம் கடன் வாங்குவதும் சரி வரவில்லை.
இதையடுத்து சீனா பக்கம் போய்விட்டார் அனில் அம்பானி. அந் நாட்டைச் சேர்ந்த China Development Bank Corp, Export-Import Bank of China, Industrial & Commercial Bank of China ஆகிய வங்கிகளிடம் அவர் ரூ. 6,000 கோடியளவுக்கு கடன் திரட்டவுள்ளார்.
இந்த வங்கிகளின் வட்டி விகிதம் பிற நாட்டு வங்கிகளை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வேறு நாடுகளில் வாங்கியிருந்தால் 6.8 சதவீத வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இப்போது 5 சதவீத வட்டிக்கு இந்தக் கடன் தரப்படவுள்ளது.
இந்த 3 வங்கிகளும் சீன அரசின் கட்டு்ப்பாட்டில் உள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன வங்கிகளிடம் அனில் அம்பானி கடன் வாங்குவது இது முதன்முறையல்ல. இதற்கு முன் கடந்த மார்ச் மாதத்தில் China Development Bank வங்கியிடம் சுமார் ரூ. 9,000 கோடியை கடனாக வாங்கியது ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இதில் பெரும்பாலான நிதி சீனாவின் ஹூவே டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கவும், சீன அரசு நிறுவனமான ஷாங்காய் எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் மின் உற்பத்தி சாதனங்கள் வாங்கவுமே பயன்படுத்தப்பட்டது.
இந் நிலையில் மீண்டும் அனில் அம்பானிக்கு கடனை அள்ளித் தரவுள்ளன இந்த சீன வங்கிகள். அனில் அம்பானிக்கு குறைந்த வட்டிக்கு பணத்தை ஏன் சீன வங்கிகள் தர வேண்டும்?.
இதில் பொருளாதார காரணங்களை விட அரசியல் காரணங்களே அதிகம் என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள், சீனாவின் பொருளாதார வல்லமையை அடுத்த நாட்டுக்குள் திணிக்கும் ஊடகங்களாகவே பார்க்கப்படுகின்றன.
இந்த முதலீடு மூலம், உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் முக்கிய நாடான இந்தியாவின் 2வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்துக்குள் சீனா மறைமுகமாக நுழைய முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்றைக்குமே, யாராலும் நம்ப முடியாத ஒரு நாடு சீனா. இப்படிப்பட்ட நாடு இந்திய நிறுவனத்துக்கு குறைந்த வட்டிக்கு கடனை கூப்பிட்டுத் தருவதை இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் கோபம் கலந்த சந்தேகக் கண்ணோடு கவனித்து வருகின்றனர்.
adaaaaaaaaaaaaaaaaaaaa...........................
பதிலளிநீக்கு