திங்கள், ஜூன் 16, 2014

இஷ்ரத் ஜஹான் வழக்கு: டயரியை ஒப்படைக்கமாட்டோம் - சி.பி.ஐ!

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கேஸ் டயரியை பரிசோதிக்கவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை சி.பி.ஐ நிராகரித்துவிட்டது.
டயரியை எக்காரணம் கொண்டும் வழங்கமாட்டோம் என்றும், சட்ட விதிகளை உறுதியாக கடைப்பிடிப்போம் என்றும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை குஜராத் மோடி போலீஸ் அநியாயமாக சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி அதிகாரிகளை விசாரணைச் செய்ய அனுமதி அளிக்கவேண்டுமெனில் கேஸ் டயரியை பரிசோதிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.ஐக்கு நிபந்தனை விதித்தது.ஆனால், இது சட்ட விரோதமாகும்.ஏனெனில் கேஸ் டயரியை விசாரணை அதிகாரி பாதுகாப்பாக வைத்து நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும் என்று சி.ஆர்.பி.சியின் 172-ஆம் பிரிவு கூறுகிறது.
விசாரணை அறிக்கையில் உள்ள விபரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க சி.பி.ஐ விரும்பவில்லை.ஏனெனில், நிலக்கரி ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சராக இருந்த அஸ்வினிகுமாருடன் பகிர்ந்துகொண்டதற்காக உச்சநீதிமன்றம் சி.பி.ஐயை கடுமையாக விமர்சித்தது.இதனைத்தொடர்ந்தே அஸ்வினிகுமார் பதவியை ராஜினாமாச் செய்தார்.ஒரு முறை கேஸ் டயரியை வழங்கினால் குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்குகளையெல்லாம் அது பாதிக்கும் என்று சி.பி.ஐ அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல்ச் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், குற்ற விசாரணை நடத்த அனுமதி கிடைக்காததால் விசாரணை துவங்கவில்லை.
ஓய்வுப் பெற்ற ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜீந்தர்குமார், பி.மிட்டல், எம்.கே.மிஷ்ரா, ராஜீவ் வாங்கடே ஆகியோரை குற்ற விசாரணை நடத்த அனுமதி அளிக்க கோரி சி.பி.ஐ, மத்திய உள்துறை அமைச்சகத்தில் மனு அளித்துள்ளது.2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கிலும் ராஜீந்தர் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ராஜீந்தர் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி இன்னொரு மனுவையும் சி.பி.ஐ அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக