திங்கள், ஜூன் 09, 2014

பிரெஞ்ச் ஓபன்: 2ஆம் முறையாக சாம்பியன் ஆனார் ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய் வீராங்கனை மரியா ஷரபோவா.இது ஷரபோவா வெல்லும் 2வது பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டமாகும்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4ஆம் தரவரிசையில் உள்ள ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் என்பவரை ஷர்போவா 6-4, 6-7, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார்.

ஆனாலும் ஷரபோவா அவ்வளவு அனாயசமாக நேற்று ஆடவில்லை. 12 முறை தன் சர்வில் டபுள் ஃபால்ட் செய்தார்.சர்வில் திணறியதால் நேற்றைய இறுதிப் போட்டியில் மட்டும் இவரது சர்வை 7 முறை ஹாலெப் முறியடித்துள்ளார்.

கடைசியில் ஷரபோவா ஒரு ஃபோர்ஹேண்ட் ஷாட்டை அடிக்க அதை ஹாலெப் பேக் ஹேண்டில் திருப்ப ஷாட் தவறாக முடிய, ஷரபோவா வெற்றி மகிழ்ச்சியில் மண்டியிட்டு கைகளில் தன் முகத்தைப் புதைத்து கொண்டார்.

நேற்றைய ஆட்டத்தின் இறுதி செட்டில் மட்டும் 10 கேம்கள் நடந்தது. இதில் 5 பிரேக்குகள். ஒரு கட்டத்தில் இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வை வெற்றி பெறாமல் தோற்றுக் கொண்டேயிருந்தனர்.

இந்த ஆட்டம் 3 மணிநேரம் 2 நிமிடங்களுக்கு நீடித்தது. 1996ஆம் ஆண்டு ஸ்டெபி கிராப், சான்சேஸ் என்பவரை வீழ்த்திய இறுதிப் போட்டிக்குப் பிறகு மிக நீளமான பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி இதுவாகும்.

மேலும் 2001ஆம் ஆண்டு ஜெனிபர் கேப்ரியாட்டி, கிம் கிளைஸ்டர்ஸை வீழ்த்திய இறுதிப் போட்டி 3 செட்களுக்குச் சென்றது. அதன் பிறகு நேற்றுதான் பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி 3 செட்களுக்குச் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக