கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும்; அணுமின் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 573 நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலையை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, மணப்பாடு, ஆலந்தலை கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 400 பைபர் படகுகளில் சென்று பங்கேற்றனர்.
கூடங்குளம் நோக்கி கடல்வழியாகச் சென்ற அவர்கள் அணு உலையின் பின்புறம் கடலில் நங்கூரமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர். போராட்டக் குழு தலைவர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன், மில்டன், ஜேசுராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் காலை 10 மணியளவில் போராட்டம் நடத்தப்பட்ட கடல் பரப்புக்கு படகுகளில் வந்தனர்.அவர்கள் அணு உலையை மூட வலியுறுத்தியும், அணுஉலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது.
இது குறித்து உதயகுமார் அவர்கள் தெரிவித்ததாவது: அணுசக்திக்கு எதிரான அறவழிப் போராட்டம் வெற்றி பெறும் வரை தொடரும். அணுஉலையை மூடுவதற்காக நாங்கள் நடத்துகின்ற போராட்டம் முற்றிலும் அறவழிப் போராட்டம் இதிலிருந்து நாங்கள் விலகமாட்டோம். இந்த போராட்டத்தில் வன்முறைக்கு துளியும் இடமே இல்லை. எங்களிடம் எந்த ஆயுதங்களும் கிடையாது. ஆனால் காவல்த்துறை நாட்டு வெடிகுண்டு வெடித்ததாகக் கூறி எங்கள் மீது வீண்பழியை சுமத்தி வருகிறது. அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தமிழக மக்களின் உரிமைக்கான போராட்டம். அது வெற்றி பெறும்வரை தொடருவோம் என்று கூறினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக