வியாழன், மார்ச் 14, 2013

பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவில் கருத்தொற்றுமை இல்லை!


புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை தடுப்புக்கான புதிய மசோதா குறித்து டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவு செய்யும்படி மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். 

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பாலியல் தடுப்புக்கான புதிய மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, விருப்ப பாலியல் உறவுக்கு உகந்த வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 18 வயது என்பதை 16 ஆக குறைக்க வேண்டும். பாலியல் வன்முறை தொடர்பாக மசோதாவில் விளக்கப்பட்டுள்ள வார்த்தையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட சில விஷயங்களில் அமைச்சர்கள் சிலரிடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. 
அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா திரத், "திருமணம் செய்ய பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் ஏற்றது என தற்போதுள்ள சட்டம் கூறுகிறது. இந்த நிலையில், விருப்ப பாலியல் உறவுக்கு ஏற்ற வயதாக தற்போதுள்ள 18 வயதை 16 ஆக குறைக்க புதிய மசோதா வழிவகை செய்கிறது. விருப்ப பாலியலுக்கான வயதைக் குறைப்பது சமூகத்துக்கு தவறான செய்தி அளிப்பதாக அமைந்துவிடும் என்று அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தேன். பாலியல் வன்முறை என்ற வார்த்தைக்கு பதில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தும்படி புதிய மசோதா அறிவுறுத்துகிறது. இது போன்ற சில விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் சில கருத்துகளை தெரிவித்தனர்'' என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கூறுகையில், "நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 22-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்குள் இந்த சட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா குறித்து, இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஒத்திவைக்கப்படுவதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, "மிக முக்கியமான சட்டத்தை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தில் தாமதமின்றி முடிவெடுத்து சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்றார். 
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை தடுப்புக்கான புதிய மசோதா தொடர்பாக விவாதிக்க 18-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத் கூறினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், "இந்த சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. அவற்றை கேட்டறியவும், மத்திய அரசின் செயல்பாடு குறித்து விளக்கவும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது'' என்றார். இந்த சட்டத்தை நிறைவேற்ற, அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோரும் நடவடிக்கையை கமல்நாத் தொடங்கியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை செவ்வாய்க்கிழமை தனித்தனியாக சந்தித்து அவர் பேசினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக