திங்கள், மார்ச் 18, 2013

ஊடகவியலாளருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி: கட்ஜுவின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும்!

புதுடெல்லி:இந்தியாவில் அச்சூடக பத்திரிக்கைகளை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரான முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பத்திரிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சத் தகுதி வரையறுக்கப்பட வேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு குழுவையும் அவர் நியமித்துள்ளார். இதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

ஊடகத்துறை என்பது இந்தியாவில் நன்கு வளர்ச்சியுற்ற துறையாக மாறியிருப்பதாக கூறும் கட்ஜூ, இதில் செயற்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளை வரையறுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று கூறுகிறார்.
கட்ஜுவின் கருத்தை சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியர் நந்தகுமார் ஆதரிக்கிறார்.இதுக்குறித்து அவர் கூறுகையில், ‘ஊடகத்துறையின் இன்றைய காலத்தேவைக்கு கட்ஜூவின் பரிந்துரைகள் அவசியத்தேவை’ என்றார்.
ஆனால் இந்தமாதிரியான கட்டாய கல்வித் தகுதிகளை எதிர்க்கும் ஊடக அமைப்புக்கள், திரைப்படம், இலக்கியம், ஊடகம் போன்ற படைப்புத்திறன் சார்ந்த துறைகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதிகளை கட்டாயமாக்குவது உலகின் வேறு எந்த சுதந்திர ஊடகத்துறையிலும் இல்லை என்றும், இது தேவையற்ற நடைமுறை சாத்தியமற்ற முன் முயற்சி என்றும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் பல முன்னணி பத்திரிகையாளர்கள், முறையாக இதழியல் பாடம் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர் என்று கூறும் தமிழில் வாரம் இருமுறை வெளியாகும் நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர் ஆர் கோபால், குறைந்த பட்சக்கல்வித் தகுதியை கொண்டுவருவதால் ஒருவரை சிறந்த பத்திரிக்கையாளராக உருவாக்கிவிட முடியாது என்கிறார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக