செவ்வாய், மார்ச் 19, 2013

காவி தோல் போர்த்திய காங்கிரஸின் அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!

புதுடெல்லி: முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று பேசிய காவி தோல் போர்த்திய காங்கிரஸின் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்கும் பூஜ்ய நேர அலுவல் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.அப்போது பேசிய சமாஜவாதி உறுப்பினர் சைலேந்திர குமார், “முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங்குக்குத் தொடர்பு உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார்.
அப்போது அவையில் இருந்த பேனி பிரசாத் வர்மா, “நான் அத்தகைய கருத்தை ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் அவதூறாகப் பேசியதற்கான ஆதாரம் உள்ளதா?” என்றார். இதையடுத்து அவையின் மையப் பகுதிக்கு வந்து சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது முலாயம் சிங் யாதவ், “லக்னௌவில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில்  ‘நாட்டு நலப் பணியில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்து பேசினேன். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர். சமூக, பொருளாதார நிலையில் முஸ்லிம் சமூகம் பின்தங்கி உள்ளதை நீதிபதி சச்சார் குழு கூடசுட்டிக்காட்டியுள்ளது. நமது எல்லைகளைக் காப்பதிலும், தேசிய வளர்ச்சியிலும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அளித்த பங்களிப்பை நாம் எப்படி மறக்க முடியும்? ஆகவே, முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என பேனி பிரசாத் எப்படி கூற முடியும்? இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார்.
அப்போது பேனி பிரசாத், “பயங்கரவாதத்துக்கு மதமோ, நிறமோ கிடையாது. பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா வன்முறை ஆகிய சம்பவங்களுக்குப் பிந்தைய வன்முறைகள் கூட பயங்கரவாத சம்பவங்கள்தான்” என்றார்.
மேற்கண்டவாறு பேனி பிரசாத் பேசிய போது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் இதே பிரச்னையை எழுப்பி சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் மக்களவை அலுவல் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பிற்பகலில் மீண்டும் அவை கூடியதும் பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது பேசிய முலாயம் சிங் யாதவ்,  “என்னைத் பயங்கரவாதி என மத்திய அமைச்சர் கூறுவாரானால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அல்லது தனது பேச்சுக்காக பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து சமாஜ்வாதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக