மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு வாழ்க்கையின் அனைத்து துறையிலும் பெண்கள் முன்னிலை பெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதால் அவர்கள் ஊராட்சி தலைவர்கள் ஆக முடிந்திருக்கிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி நடந்த சம்பவம் (மாணவி கற்பழிப்பு) நாட்டையே உலுக்கி விட்டது. தினந்தோறும் நாளிதழ்களை நாம் புரட்டுகிறபோது, அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய செய்திகள் நிரம்ப இடம் பெற்றிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மதன்மோகன் மாளவியா உணர்ந்தார். பெண்கள் மீதான மதிப்பை உறுதி செய்ய முடியாத ஒரு நாடு, ஒருபோதும் முன்னேற முடியாது.
மாவட்டங்களில் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடியுமானால் இரண்டு மடங்கு ஆக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே பணிச்சுமையால் கோர்ட்டுகள் தவித்து வருகிறபோது, கோர்ட்டுக்கு வெளியே தீர்வுகள் காணப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் பணிச்சுமையை குறைக்கிறது. இதற்காக பல்வேறு தீர்ப்பாயங்கள், சமரச மையங்கள் வந்திருக்கின்றன. அவை குறிப்பிட்ட அளவுக்கு பங்களிப்பு செய்து வருகின்றன. நாட்டை வடிவமைப்பதில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக