ஞாயிறு, மார்ச் 17, 2013

! இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் !

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் அமீர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.சிவா முன்னிலை வகித்தார். 23 சங்கங்களைச் சேர்ந்த 69 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிறோம். 


மேலும், தொடர்ந்து எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை இரக்கமற்ற முறையில் கொலை செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களின் அக்கிரம செயலை கண்டிப்பதுடன், தீவிரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 


தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தினர் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில், இன்னும் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் மீதமுள்ள தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் நலனுக்காக தனி ஈழம் பெற்றுத்தர மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் இனிமேல் தாக்கப்படாமல் இருக்கவும், சிறையில் இருக்கும் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 


மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது முழு ஆதரவை அளித்து, தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக