சென்னை: மதுவிலக்கு அமுலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம். இரா.விஸ்வநாதன் இன்று தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக அரசின் 2013-2014 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசு, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜான் ஜேக்கப் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், “தமிழகத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் எல்லோரையும் விட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக அக்கறை உள்ளது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் தான் சமூக விரோதிகளுக்குச் சென்று கொண்டிருந்த மது வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு வரவே டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக மதுவிலக்கு உள்ளது. ஆனால் மது தாராளமாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் கூட மதுவை கடைகளில் சென்று தான் வாங்க வேண்டும். ஆனால், குஜராத்தில் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதாக அங்கிருந்த வந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு நடந்த நாளில் மட்டும் அந்தப் பகுதி டாஸ்மாக் கடைகளில் ரூ. 50 லட்சத்துக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் முதலில் தனது கட்சி தொண்டர்களை மது குடிக்காமல் திருத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கு மதுவிலக்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் முதலில் அறிவுரை கூற வேண்டும். இந்தியா முழுவதும் மதுவிலக்கு வராத வரை தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக