சனி, மார்ச் 16, 2013

ஈழத் தமிழர் விவகாரம் : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவோம் ! - திமுக !!

ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவோம் என்று திமுக எச்சரித்துள்ளது. வெள்ளியன்று  திமுக தலைவர் கருணாநிதி "இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறினால், மத்திய அரசின் அமைச்சரவைப் பதவிகளில்  திமுக ஒட்டிக்கொண்டிருப்பதில் பொருளில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் ஒரு பிரதான (கேபினட்) அமைச்சரும், நான்கு இணை அமைச்சர்களும் திமுகவுக்கு உள்ளனர். 18 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் காங்கிரஸ்ஸூக்கு அடுத்த நிலையில் உள்ளது.

"ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுமத்தில் அமெரிக்க அரசு முன்னெடுக்கும் தீர்மானத்தை ஆதரித்து, இலங்கை இனப் படுகொலைகள் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்" என்று திமுக தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"போர்க் குற்றவாளிகளை இனங்கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் விசாரணை அமைய வேண்டும்" என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

தனது அறிக்கையில், " ஐ.நா. மனித உரிமைகள் குழுமத்தில் அமெரிக்க அரசு கொண்டு வர உள்ள தீர்மானங்கள் தொடர்பாக பல கருத்துகள் பரபரப்புடன் பேசப்படுகின்றன. இந்தச் சூழலில் திமுகவைப் பொருத்தவரையில், இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாகவும், அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான போர்க்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது தொடர்பாகவும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயத்துக்கும் இடம் கொடுக்காத  வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் இந்திய அரசின் அமைச்சரவையில் திமுக இனி மேலும் நீடிப்பதென்று அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக