திங்கள், மார்ச் 18, 2013

ஆப்ரேசன் க்ரீன் ஹண்ட் பெயரில் தொடரும் பயங்கரவாதம்!

பா.ஜ.க ஆளும் சட்டீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 28/2012 அன்று பெண்களும், குழந்தைகளும் உள்பட 17 பழங்குடியின மக்களை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது.    
இது குறித்து உண்மை அறியும் குழுவை சார்ந்த அய்ந்திகா தாஸ், J.K..வித்யா, சவுரப்குமார், சுஷில்குமார் மற்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் G.N. சாய்பாபா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கத்தக்க செய்திகள் வெளியாகி உள்ளது.  
பாரதிய ஜனதா உருவாக்கி உள்ள ஹிந்துத்துவா ஸல்வாஜுதும் குண்டர்களும், துணை ராணுவப் படையினரும் மற்றும் போலீசும் சேர்ந்து 400க்கும் அதிகமான பழங்குடியின மக்களின் குடிசைகளுக்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். வீடுகளை கொள்ளையடித்து ஏராளமான மக்களை தாக்கி ஒரு அப்பாவியின் கையை வெட்டித் துண்டித்துள்ளனர். 
மேலும், பிஜாப்பூரின் தொலை தூர கிராமங்களான பிடியா, டொமாங்கா, சிங்கம், லிங்கம், மொமாடி, டோமுடும், கொண்டாபாடு உள்ளிட்ட கிராமங்களில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்த பிறகு குடிசைகளுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
மவோயிஸ்டுகளின் ஜனதனா சர்க்கார் கட்டிய பள்ளிக்கூடங்கள், ஹாஸ்டல்கள் இடிக்கப்பட்டுள்ளன. கிணற்றில் விஷத்தை கலந்ததுடன், அங்குள்ள ஃபர்னிச்சர்களை சேதப்படுத்தியுள்ளனர். ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் காட்டுக்குள் ஒளிந்து இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர். தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது.
2005-ஆம் ஆண்டு முதல் 200 பள்ளிக்கூடங்களை துணை ராணுவப்படையினர் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியினரின் வீடுகள், பள்ளிக்கூடங்கள், ஹாஸ்டல்களை தாக்கி தீயிட்டதற்கு காரணம், வளம் நிறைந்த பழங்குடியினர் நிலங்களை ஏகபோக குத்தகை நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கான முயற்சியாகும் என்று மெயின் ஸ்ட்ரீம் வார இதழின் எடிட்டர் சுமித் சக்ரவர்த்தி கூறுகிறார். பழங்குடியினர் மீதான தாக்குதல்களை சிவில் உரிமை அமைப்புகளான எ.பி.சி.எல்.சி, எ.பி.டி.ஆர், சி.டி.ஆர்.ஓ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டித்துள்ளன.
துணை ராணுவப் படையினரை தண்டிக்கவேண்டும், பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும், ஆபரேசன் க்ரீன் ஹண்டின் பெயரால் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெறுக, பள்ளிக்கூடங்களில் இருந்து ராணுவம் வெளியேறவேண்டும், யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை உபயோகித்து கைதுச் செய்தவர்களை விடுதலைச் செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகளை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உண்மை கண்டறியும் குழு முன்வைத்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக