திங்கள், மார்ச் 18, 2013

தீவிரமாகும் மாணவர்கள் போராட்டம்!

சென்னை:இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் தொடர் போராட்டங்கள்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்​தில், லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் வாபஸ் வாங்கப்பட்டாலும், அவர்கள் ஆரம்பித்துவைத்த தூண்டுதல் தமிழக மாணவர்கள் அனைவரையும் வீறுகொண்டு வீதிக்கு வரவைக்கக் காரணமாகிவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இருப்பினும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.
கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. கோவை ஒண்டிப்புத்தூர் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை சட்டக்கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் 6-ஆவது நாளாக தொடர்கிறது. பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் 5-ஆவது நாளாக தொடர்கிறது.
இதனிடையே, மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இலங்கைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேறு சில கல்லூரிகளின் மாணவர்களும் நேரில் வந்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். சட்டக்கல்லூரி மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து, காந்திபுரம் சந்திப்பு சாலையில் மனித சங்கிலி மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால், இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினரைக் கண்டித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின் பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்​டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை அருகே உண்ணா​விரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி,  கடலூர் அரசுக் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ”ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்று கொந்தளித்தனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக