வியாழன், மார்ச் 28, 2013

மறுவாழ்வு கோரி கஷ்மீர் திரும்பியவர்கள் போராட்டம்!

ஸ்ரீநகர்: அரசின் சரணடைதல் கொள்கையின் படி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் இருந்து திரும்ப வந்த குடும்பங்கள், ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போல தங்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சரணடைந்த ஸைஃபுல்லாஹ் ஃபாரூக் செய்தியாளர்களிடம் கூறியது: “நாங்களும் மனிதர்கள் தாம். சுதந்திரமாக வாழ அனுமதிக்கவேண்டும். பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம். அடையாள அட்டைகளை அனுமதிக்க மறுக்கின்றார்கள். குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க மறுக்கின்றார்கள். எங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏற்கனவே திரும்பி வந்த கஷ்மீரிகளுக்கு புனர் வாழ்வுக்கான ஏற்பாடுகளை முதலில் அரசுச் செய்யட்டும். பிறகு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களை சரணடைய அழைப்பு விடுக்கட்டும். இங்கு 27 ஆயிரம் பேர் உள்ளனர். சில சூழ்நிலைகளைத் தொடர்ந்து நாஙள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை நிறுத்திய பிறகு அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ உரிமை உண்டு.” இவ்வாறு ஃபாரூக் கூறினார்.
ஜம்மு-கஷ்மீர் மனித நல அமைப்பின் கீழ் கஷ்மீருக்கு திரும்பியவர்கள் போராட்டம் நடத்தினர். ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாகத் அலி ஷா அரசின் சரணடைதல் கொள்கையின் திரும்பி வந்தபொழுது டெல்லியை தகர்க்க சதிச் செய்தார் என்று பொய் கூறி டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவு கைது செய்த சூழலில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் உயிரை மாய்ப்போம் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். எல்லைக்கு அப்பால் உள்ள உறவினர்களை காண அனுமதிப்பதில்லை என்று திரும்ப வந்த கஷ்மீரி ஒருவரின் மனைவி குற்றம் சாட்டினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக