திங்கள், பிப்ரவரி 06, 2012

அமெரிக்க உதவியால் அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சி கூடத்தால் தமிழக,கேரள அணைகளுக்கு ஆபத்து !

 தமிழக-கேரள எல்லையில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தால் கேரள அணைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அணுக் கதிர்வீச்சு குறித்த ஆராய்ச்சியாளர் வி.டி. பத்மநாபன் கூறினார்.சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.
அறிவியலால் நன்மை மட்டுமே ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் நியூட்ரினோ. நியூட்ரினோ என்பது அணுவில் இருந்து பிளக்கப்படுவதாகும். ஆனால் இயற்கையிலேயே சூரியக் கதிர்களில் இருந்தே நாம் நியூட்ரினோ சக்தியைப் பெற முடியும். இப்போது அரசாங்கம் அமைக்கவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

முதலில் இந்த ஆராய்ச்சிக் கூடம் ஊட்டியில் அமைக்க  திட்டமிடப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக இது இப்போது தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்குக் கனமான பாறைகள் தேவை. அத்தகைய பாறைகள் உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் கிடைக்கிறது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நியூட்ரினோக்கள் ராணுவப் பயன்பாட்டுக்காக ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

நியூட்ரினோவால் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் எத்தகைய வலிமையான பொருள்களைக் கொண்டு தடுத்தாலும் எதிரியை அழிக்கும் வல்லமை பெற்றது.

தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சிக் கூடத்தால் இடுக்கி அணைக்கு பாதிப்பு ஏற்படும்.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக 10 லட்சம் டன் பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இந்தப் பாறைகளை வெட்டுவதற்காக 1,000 டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படும். இந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நில நடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இடுக்கி அணை வலுவிழக்கும் ஆபத்தும் உள்ளது.

இந்தப் பாறைகளை உடைப்பதன் காரணமாக 1 லட்சம் டன் எடையுள்ள தூசி காற்றில் பரவும். இதனால் பசுமை மாறாக் காடுகளான மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் மாசுபடும்.

அமெரிக்காவுடன் இணைந்து அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சிக் கூடத்தைப் பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் அரசு அமைக்கிறது. இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார் பத்மநாபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக