புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான ஹிந்துத்துவா தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தூரைச் சார்ந்த கமல் சவுகான் என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் சவுகானை, என்.ஐ.ஏ தலைமையகத்திற்கு அழைத்து கைது செய்தது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாங்கே மற்றும் கல்சங்கரா ஆகியோர் மறைந்திருக்கும் இடத்தை குறித்து இவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இருவரையும் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் பரிசு அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்திருந்தது.
68 பேரை பலி வாங்கிய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்தா, சன்யாசினி பிரக்யாசிங் தாக்கூர், கொலைச் செய்யப்பட்ட சுனில்ஜோஷி, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா, ராமச்சந்திரா கல்சங்கரா ஆகியோர் மீது குற்றம் சாட்டி என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுனில் ஜோஷியின் கொலையை குறித்தும் சவுகானிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்கையும் என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக