வியாழன், பிப்ரவரி 09, 2012

கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது: சு,சுவாமி !

 பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி,  இலங்கை அதிபர் ராஜபக்சேவை  நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்திருக்கும் நிலையில், சுப்ரமணியன் சுவாமி, கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என்றும் கூறி இருக்கிறார்

சுப்ரமணியன் சுவாமி இலங்கை ரத்தினபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியமில்லை

புலிகளை ஒழித்ததற்காக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது. ராஜபக்சே வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடமளிக்காது புலிகளை அழித்தார். இதனால் இலங்கை வாழ் இந்திய மக்களும் இதர மக்களும் நாட்டில்  எவ்வித ராணுவ கெடுபிடிகள் இல்லாமலும் சகல பகுதிகளுக்கும் சென்று வரமுடியும்.

புலிகள் ராஜிவ் காந்தியை கொன்றதுதான் அவர்கள் செய்த மாபெரும் தவறு. அது அவர்களின் முட்டாள் தனம். கூலிக்காக செய்தார்களா? அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது. “ராஜிவ் காந்தி” இலங்கை பிரச்னையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

ஒரு லட்சம் இந்திய ராணுவத்தினர் இலங்கையில் இருந்தனர். ராஜிவ் உயிருடன் இருந்தால் பிரச்னை சுமூகமாக இருந்திருக்கும். புலிகள் போதை பொருட்கள்  உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டனர். இதனை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்ய பின்வாங்கியதால் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணமாகும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை பிரச்னைக்கு தீர்வு வழங்குவது அல்லது உதவி வழங்குவது தனியாக தமிழ்நாட்டு அரசாங்கத்தால் முடியாது. கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படிதான் கச்சத்தீவு வழங்கப்பட்டது. தற்போது கருணாநிதி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

இலங்கை வாழ் இந்திய மக்கள் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.இவர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் இந்தியா கூடுதல் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறு இருக்க முடியாது. இந்திய வம்சாவளி மக்களின் பிரச்னைகளை முன் வைத்து தில்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்று சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக