ஐந்து மாதங்களுக்கும் மேலாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்துவரும் நிலையில், இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு 'விழிப்பு' வந்திருக்கிறது. கடந்த வாரம், பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில், 'தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவை கூடங்குளம் அணு மின் நிலையம்’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி மற்றும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் என கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதில் இருந்தே அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் பற்றி ஆளாளுக்கு விளாசத் தொடங்கினர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் ஏகத்துக்கும் காட்டம். ''தமிழகத்தில் இப்போது நகர்புறங்களில் எட்டு மணி நேரமும் கிராமப்புறங்களில் 12 மணி நேரமும் மின் வெட்டு இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அணு உலையைத் திறக்க ராணுவத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். அது தேவையில்லை. 'செய்கிறாயா... இல்லையா?' என்ற கேள்வியை இங்கே மேடையில் இருக்கும் யார் கேட்டால் மரியாதை இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்'' என்று ப.சிதம்பரத்தை மறைமுகமாகச் சீண்டிவிட்டு உட்கார்ந்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக்கோரி சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இருந்ததால், அவர் கடைசி நேரம் வரை டெல்லியில் இருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், விமானத்தில் மதுரைக்கு வந்து... அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.
ப.சிதம்பரம் பேசும்போது, ''மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அணு மின்சாரம் அவசியம். 13,500 கோடி ரூபாய் செலவு செய்து அணு உலை கட்டிய நிலையில், உதயகுமாரன் போன்றோர் எங்கிருந்தோ வந்து திடீரென போராட்டம் நடத்துகிறார்கள். 'இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்? யாருடைய பின்புலம் இவர்களுக்கு இருக்கிறது? எங்கிருந்து பணம் வருகிறது?’ என்று கேட்பதில் என்ன தவறு?'' என்றார்.
அணு உலையை ஆதரித்து இந்தக் கூட்டம் நடந்த அதேநாள், அணு உலை எதிர்ப்பாளர்களும் சும்மா இருக்கவில்லை.
பொதுக்கூட்டம் நடந்த 4-ம் தேதி காலை, அணு உலை எதிர்ப்பாளர்கள் சுப.உதயகுமாரன் தலைமை யில் கறுப்புக் கொடியுடன் ஆயிரக்கணக்கான அதிகமான மக்கள் கூட்டப்புளி கிராமத்தில் திரண்டு பேரணி நடத்தினார்கள். அதன் பின்னர், சுப.உதயகுமாரன் உட்பட 143 பேர் தலையை மொட்டையடித்து மத்திய அரசுக்கும் அணு மின் நிர்வாகத்துக்கும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ''என் பெயருக்கு ஒன்றரைக் கோடி வந்திருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசி இருக்கிறார். நான் இப்போது கடுமையான பண நெருக்கடியில் இருக்கிறேன். அதனால் அந்தப் பணம் எந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறது, எந்த வங்கியில் எந்தக் கணக்கில் இருக்கிறது என்று தெரிந்தால், அதனைப் பயன்படுத்த வசதியாக இருக்கும். தமிழக அரசின் குழுவாவது மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு ஜனநாயக முறையில் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.
இன்னொரு பக்கம் காங்கிரஸில் இருந்து, ''சிதம்பரம் போன்றவர்கள் நேரடியாக உதயகுமாரன் பெயரை மேடைகளில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கூட்ட வேண்டுமா?'' என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக