தமிழக எம்.எல்.ஏ.க்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டு வருகிறது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே உழைக்க முடியும் என்ற தாரக மந்திரத்தை பலர் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
தமிழக எம்.எல்.ஏ.க் கள் விடுதியில் பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் தொடங்கி வைத்தார். உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆண் எம்.எல்.ஏ.க்களும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளனர். முன்பு கண்ட, கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு வந்தவர்கள் இப்போது உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
கலோரி குறைந்த உணவுக்கு மாறியுள்ளனர். எண்ணையில் தயாரிக்கப் பட்ட பஜ்ஜி, வடை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை தவிர்த்து வருகின்றனர். சட்டசபை வளாகத்தில் உள்ள கேண்டீனில் இந்த வகை உணவுகளின் விற்பனை மிகவும் குறைந்து விட்டது.
இந்த உணவுகளுக்கு பதிலாக, காய்கறியில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச், அவித்த பச்சை பயறு, சர்க்கரை இல்லாத காபி, டீ போன்றவற்றையே வாங்கி சாப்பிடுகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது இந்த காட்சியை காண முடிந்தது. இளைய எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி மூத்த எம்.எல்.ஏ.க்களும் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இது குறித்து சட்டசபை வளாக கேண்டீன் ஊழியர் ஒருவர் கூறுகையில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் உணவு முறை மாறி விட்டது.
எண்ணையில் தயாரான உணவுகளை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியமான இட்லியை கூட யாரும் விரும்புவதில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வெஜிடபுள் சாண்ட்விச், அவித்த பச்சை பயறு ஆகியவற்றை தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். தினமும் 60 சாண்ட்விச்களும், 100 பிளேட் பச்சை பயறும் விற்பனையாகிறது என்று தெரிவித்தார்.
இளம் எம்.எல்.ஏ.வான ஏ.கணேஷ்குமார் கூறியதாவது:-
ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம், தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் தான் சக்தியுடன் திகழ்கிறேன். எனது தொகுதிக்கு அடிக்கடி செல்கிறேன். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்கிறேன். உடல் நலம் நன்றாக இருப்பதால் தான் சுறு சுறுப்பாக செயல்பட முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பழ.கருப்பையா கூறுகையில், மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டி, உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறேன். உடலை கட்டுக் கோப்புடன் பராமரிக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக