வியாழன், பிப்ரவரி 09, 2012

ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் !

ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம்சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்லவோ, பேசவோ தடை இருக்கிறது. ஆனால் சபையில் விவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது மந்திரி லட்சுமண் சவதியும், அருகில் இருந்த மந்திரி சி.சி.பட்டீலும் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர். சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் கன்னட தனியார் சேனல்கள் படம் பிடித்து ஒளிபரப்பின. அப்போது மந்திரிகள் ஆபாச படம் பார்த்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இதைப்பார்த்து அரசியல் கட்சியினரும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். சட்டசபையின் கண்ணியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றும், இது நாட்டுக்கே அவமானம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து பாரதீய ஜனதா மேலிட உத்தரவின்பேரில் கர்நாடக முதல்- மந்திரி சதானந்தா கவுடா பெங்களூரில் நேற்று அவசர கூட்டத்தை கூட்டி சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 2 மந்திரிகளையும், அவர்களுக்கு இந்த ஆபாச கிளிப்பிங்ஸ்சை அனுப்பிய கிருஷ்ண பாலேமரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

அதன்படி 3 பேரும் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். முதல்-மந்திரி சிபாரிசின் பேரில் அவர்களது ராஜினாமாவை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக்கொண்டார். நீக்கப்பட்ட 3 மந்திரிகள் கூறுகையில், கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதை தடுக்கவே தாங்களாக முன்வந்து ராஜினாமா செய்ததாகவும், எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

ஆபாச பட விவகாரம் நேற்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இதில் உண்மையை கண்டறிவதற்காக 6 பேர் கொண்ட சட்டசபை விசாரணைக்குழு விசாரணை நடத்த சபாநாயகர் போபையா உத்தரவிட்டார். பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் (மார்ச்) 12-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை 3 பேரும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட 3 பேரும் வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்குள் சபாநாயகரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மந்திரிகளை நீக்கினால் மட்டும் போதாது இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக அரசு பதவி விலக வேண்டும். 3 மந்திரிகளின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்வதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.

நெருக்கடி முற்றுவதால் கட்சிக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படாமல் தடுக்க நீக்கப்பட்ட 3 மந்திரிகளின் எம்.எல்.ஏ. பதவிகளை பறிக்கவும் பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உண்டு. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் தொழில் நுட்ப சட்டம் விதி 67-ன்படி ஆபாச படம் பார்ப்பது குற்றமாகும். இதற்கு 5 வருடம் ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆபாச படம் பார்ப்பது மட்டும் அல்லாது அதை மற்றவர்களது செல்போனில் பரவவிட்ட குற்றமும் உள் ளது. எனவே நீக்கப்பட்ட 3 மந்திரிகளும் இந்த குற்றத்தைச் செய்தவர்களாக கருதப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கலாம். இதுபற்றி முறைப்படி போலீசில் புகார் செய்ய வேண்டும்.

இது சட்டசபைக்குள் நடந்த பிரச்சினை என்பதால் சபாநாகர் அல்லது அவர் சார்பில் சட்டசபை செயலாளர்தான் போலீசில் புகார் செய்ய வேண்டும். ஆனால் அதுவரை எந்த புகாரும் போலீசுக்கு வரவில்லை. எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை அறிக்கை வந்த பின்புதான் இதில் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆபாச பட விவகாரத்தால் பாரதீய ஜனதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கட்சியினர் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி அலகாபாத்தில் நிருபர்களி டம் கூறினார். இதில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கட்சி ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை முடிவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக