சனி, பிப்ரவரி 04, 2012

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் விற்ற இரண்டு சாமியார்கள் கைது

திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக் கடை குட்டிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரசாத் (வயது37). பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மண்டுதாஸ்(30). இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி இருந்தனர். அங்கு ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு வந்த 2 பேரும் சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்பு கோவளம் லைட் ஹவுஸ் பீச் ரோட்டில் தனியாக சிறிய அளவில் ஆசிரமம் அமைத்தனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கோவளம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தங்களது ஆசிரமத்தில் யோகா, வர்ம பயிற்சி அளித்து வந்தனர். அத்துடன் அவர்களுக்கு ஹாசிஸ் என்ற போதை பொருளை சப்ளை செய்தனர்.இதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தனர்.
 
இது பற்றி போலீசாருக்கு புகார்கள் சென்றன.திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் ஜோஸ், ஆசிரமத்தை கண்காணிக்கும் படி உதவி போலீஸ் கமிஷனர் மோகன் தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் ஸ்ரீபிரசாத், மண்டுதாஸ் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர்.
 
நேற்று மாலை அவர்கள் நடத்தி வந்த ஆசிரமத்திற்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 1 1/2 கிலோ ஹாசிஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 52 பிளாஸ்டிக் பொட்டலங்களில் மிட்டாய் போன்று பொதிந்து அவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்று இருவரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிய வந்தது.
 
 இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்வதேச போதை கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக