2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பெரிய வெடிகுண்டு வைத்து விட்டது உச்ச நீதிமன்றம். அதுவும் தனது நீதி பரிபாலனத்தில் இருந்து ஓய்வு பெறும் தினத்தில் நீதிபதி கங்குலி (நீதிபதி சிங்வீயுடன் சேர்ந்து!) அளித்திருக்கும் தீர்ப்பு, 'நான் ஓய்வு பெற்றுப் போனாலும் வழக்கு ஒழுங்காய் நடந்து உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது!
2ஜி வழக்கின் முன்கதை அனைத்தும் வாசகர்கள் அனைவரும் விலாவாரியாக அறிந்த விஷயங்கள்தான். இந்தியக் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய சொத்தை, சில தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது சொந்த சேமிப் புக்குத் திருப்பிய வகையில், பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய்
இதன் இழப்பீட்டு மதிப்பு என்று மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை சொன்னது. இதுதொடர்பாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ., 'சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இதில் கைமாறி உள்ளது’ என்று குற்றம் சாட்டியது. இதை விசாரிக்க நீதிபதி ஷைனி கொண்ட தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைதானார்கள். இந்தியாவையும் தாண்டி உலகம் முழுக்க மீடியாக்களின் கவனத்தை இந்த வழக்கு ஈர்த்தது. ஆ.ராசா, கனிமொழி, 'கலைஞர் டி.வி.’ சரத்குமார் ஆகியோர் கைதானதால், தமிழகத்தை இது பரபரப்பாக்கியது. ஆ.ராசா மற்றும் அவரது செயலாளர் சித்தார்த்த பரூவா
ஆகிய இருவர் நீங்கலாக, மற்றவர்கள் அனைவரும் ஜாமீனில் வந்து விட்டார்கள். இதுதொடர்பான, விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தொட ர்ந்து நடந்துவருகிறது.
இந்த நிலையில் தான், உச்ச நீதிமன்றத் தில் சுப்பிரமணியன் சுவாமியும் பொது நல வழக்கு மையத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் சில மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். சி.பி.ஐ. இந்த வழக்கை பாரபட்சம் அற்ற நிலையில் நடத்தவில்லை என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. சி.எஸ். சிங்வீ, ஏ.கே.கங்குலி ஆகிய இரண்டு நீதிபதிகளும்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை முழுமையாக விசாரித்தவர்கள். அவர்களுக்கு முன்பாக இதன் விசாரணைகள் முடிந்து கடந்த 2-ம் தேதி தீர்ப்பை அளித்தனர். நீதிபதி ஏ.கே.கங்குலி, 2-ம் தேதி தனது பணியில் இருந்து ஓய்வு பெறுவதால், அதுவே இந்த வழக்கின் தீர்ப்புத் தேதியாகவும் ஆனது.
இதுவரை வழவழா கொழகொழா என்று போய்க்கொண்டு இருந்த 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் இறுக்கம் பெற்றுள்ளது. கைதுப் படலம், வழக்கு விசாரணை என்று ஒரு பக்கம் நடந்து வந்தாலும், 2ஜி உரிமங்களைப் பெற்ற கம்பெனிகள் எதற்கும் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ராசா, பதவி விலகியதைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு அமைச்சரான கபில்சிபல், 'அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்’ என்று முதல் நாள் பிரஸ்மீட்டில் அறிவித்தார்.
அடுத்தவாரமே, பல்டி அடித்து... 'அனைத்து நிறுவனங்களும் அபராதத் தொகையை செலுத்தினால் போதும். உரிமங்கள் தொடரும்’ என்றார். அதன்பிறகு, 'இது ஒரு ஊழலே இல்லை. யாருக்கும் நஷ்டம் இல்லை. தவறு எதுவும் நடக்கவில்லை’ என்றார். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விஷயங்களுக்கு நெத்தியடியைக் கொடுத்தது.
''2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான 122 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இந்த உரிமங்களை நான்கு மாதங்களுக்குள் ரத்து செய்தாக வேண்டும். இந்தக் கால கட்டத்தில் ஏலமுறையில் டிராய் புதிய உரிமங்களை வழங்க வேண்டும். யுனிடெக் ஒயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் டாடா டெலிகாம் நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. லூப், எஸ்-டெல், அலையன்ஸ் மற்றும் சிஸ்டெமா ஷியாம் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்'' என்று நீதிபதிகள் அறிவித்தது ஸ்பெக்ட்ரம் வழக்கின் மிக முக்கியமான திருப்பம்.
வீடியோகான் 21 உரிமங்கள், யுனினார் 22, ஐடியா 9, லூப்பின் 21, எஸ்-டெல் 6, சிஸ்டெமா 21, டாடா 3, ஸ்வான் 13, அலையன்ஸ் 2 ஆகிய உரிமங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதை, சி.பி.ஐ-யே எதிர்பார்க்கவில்லை. ''இந்த நிறுவனங்கள் தங்களின் உரிமங்களை அப்படியே வைத்துக்கொள்ளவில்லை. வெளிநாட்டு நிறுவனங் களுக்கு விற்பனை செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளில் இந்த உரிமங்களைப் பெற்றுள்ளன. சி.பி.ஐ. கணக்கின்படி, சுமார் 23 ஆயிரம் கோடி கைமாறி உள்ளது. உரிமங்கள் ரத்து ஆன நிலையில் இந்த நிறுவனங்கள் கொடுத்ததைத் திருப்பிக் கேட்டால், என்ன ஆகும்?'' என்று உள்விவரங்களை அறிந்தவர்கள் மலைப்புடன் பேசுகிறார்கள்.
''ராசா கைதானது முதல் சுப்பிரமணியன்சுவாமி ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். 'மிக மோசமான பலரது கைகள் இதற்குள் இருப்பதால், ராசா இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் சிறைக்கு உள்ளே இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பானது’ என்று சொன்னார். இப்போது உரிமங்களும் ரத்தானதால், அந்த நிறுவனங்களின் கோபம் இன்னும் அதிகமாகும். இந்த உரிமங்களை பெறுவதற்கு அவர்கள் 'கைவிட்டு’ கொடுத்தது எல்லாம் வீணாய் போகும்! கொடுத்ததை 'பங்குதாரர்கள்’ அத்தனை பேரிடமும் கேட்டுத் திரும்ப வாங்க முடியாது. ஆனால், இந்த 'லேவாதேவி’யை முன்னின்று செய்தவர் யாரோ... அவரே மொத்தப் பங்குக்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். முடியாமல் போனால் விளைவுகள் எப்படியும் ஆகும்'' என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை எந்த மாதிரி எதிர்கொள்ளப் போகிறது என்பதை வைத்தே அடுத்த கட்டப் பரபரப்பு நகர்வுகள் டெல்லியில் இருக்கும்!
-
சிதம்பரம் தலை, இன்று தப்புமா?
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வருடந் தோறும் டெல்லி பத்திரிகையாளர்களுக்கும் (தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு அல்ல) தனக்கு நெருக்கமான வர்களுக்கும் பொங்கல் விருந்து கொடுப்பார். இந்த ஆண்டு ஏனோ அவர் யாரையும் அழைக்கவில்லை.
ஏனென்றால், 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் செய்தி நாயகனாக ஆ.ராசா இருந்தார். 2012-ல் சிதம்பரம் அந்த இடத் தைப் பிடித்து விட்டார். 2ஜி விவகாரத்தில் சிதம்பரம் குற்றவாளியா... இல்லையா? என்று, பிப்ரவரி 4-ம் தேதி முடிவு சொல்ல இருக்கிறது சிறப்பு நீதிமன்றம். இந்த டென்ஷனில்தான் பொங்கல் கொடுப்பதை மறந்தே போய்விட்டார். அந்த நாள் நெருங்கி விட்டது!
''ஆ.ராசா எந்த அளவுக்குக் குற்றம் புரிந்து நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறாரோ... அதே அளவுக்கு சிதம்பரமும் குற்றம் புரிந்தவர்தான். நான் கொடுத்துள்ள ஆதாரங்கள், ஆவணங்களில் இதற்கான முகாந்திரங்கள் நிறையவே இருக்கின்றன. ஆ.ராசாவும் சிதம்பரமும் கூட்டு சேர்ந்து இந்தக் குற்றங்களைச் செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் 2003-ம் ஆண்டு அக்டோபர் மாத அமைச்சரவை முடிவைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
2008 நவம்பர் 4-ம் தேதி ராசாவும் சிதம்பரமும் சேர்ந்து பிரதமரை சந்தித்து, கூட்டு முடிவு எடுக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர். இதனால், ஸ்பெக்ட்ரம் உரிமம் விலை நிர்ணயிப்பதில் இரண்டு பேரும் உள்நோக்கத்தோடு முழு சம்மதத்துடன்தான் கூட்டு முடிவாக எடுத்துள்ளனர். இதைத்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரணாப் முகர்ஜியின் சம்மதத்துடன் நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய தகவலில் உறுதி செய்தது'' என்று சுப்பிரமணிய சுவாமி சொல்லி இருக்கிறார்.
நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர் களிடம் பேசிய சுவாமி, ''என்னுடைய வாதத்தில் நீதிமன்றம் திருப்தி அடைந் திருக்கும் என்றே நினைக்கிறேன். வருகிற 4-ம் தேதி இந்த விவகாரத்தில் நல்ல செய்தியை நாடு கேட்க இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆ.ராசா, சோட்டே மாஸ்டர் (சிலீஷீtமீ ஹிstணீபீ) என்றால் சிதம்பரம், படே மாஸ்டர் (ஙிணீபீமீ ஹிstணீபீ) அல்லது மாஸ்டர் மைண்ட். அதைத்தான் வெளியே கொண்டுவந்து இருக்கிறேன்'' என்றார் நம்பிக்கையுடன்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வீ, கங்குலி ஆகிய இருவரும் சேர்ந்து அளித்த தீர்ப்பில் சிதம்பரம் குறித்த தங்களது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார்கள்.
''2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கலாமா என்பது குறித்து இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றம் முடிவு எடுக்கட்டும்’ என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. தனி நீதிமன்றம் இதுதொடர்பாக தனது விசாரணையை முடித்துவிட்டு பிப்ரவரி 4ம் தேதி தீர்ப்பு என்று ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில் புதுக்கருத்து எதையும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. இந்நிலையில், சிதம்பரம் தலை தப்புமா இல்லையா என சனிக்கிழமை அன்று தெரிந்து போகும்!
''ஊழல் அரசியல்வாதிகள் இனி நிம்மதியாக இருக்க முடியாது!''
'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருக்கும் ஆ.ராசா தவறு செய்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு அனுமதி தர வேண்டும்’ என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பினார். அதற்கு ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பதிலும் தராமல் வைத்திருந்தார் மன்மோகன். உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுதான் இதற்கான அனுமதியை சுவாமியால் வாங்க முடிந்தது. எனவே, புதிய வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில்தான் கடந்த 31-ம் தேதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
''ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது வழக்குத் தொடர குறிப்பிட்ட காலவரம்புக்குள் (அதிகபட்சம் நான்கு மாதங்கள்) அனுமதி வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பு கூறியதோடு, ஆ.ராசா குறித்த சுவாமியின் கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் சரியான நடவடிக்கைகளையும் யோசனைகளையும் வைக்காதது குறித்தும் குறை கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் செயலாளராக (உ.பி. கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பல பிரதமர்களுடன் பணிபுரிந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியத்திடம் பேசினோம்.
''குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி (பிரிவு 197) எந்த அரசு ஊழியர் மீதும் வழக்குத் தொடர்வதற்கு, முன் அனுமதி தேவை. அதே போன்று ஊழல் தடுப்புச் சட்டம் மூலம் மேல்மட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும் அனுமதி தேவை. குறிப்பாக, அரசின் புலனாய்வுத் துறைகள் (சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு) போன்றவை, இணைச் செயலாளர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கும் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும். அனுமதி கிடைக்கவில்லை என்றால், வழக்குப் போட முடியாது. அதனால், ஊழல் புரியும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனுமதிக்காத நிலையிலேயே நீதிமன்றத்துக்குச் சென்றார் சுவாமி. அவர் அப்படிப் போகவில்லை என்றால், 50 வருடங்கள் ஆனா லும் ஆ.ராசா மீது வழக்கு தொடரப்பட்டு இருக்காது. அவர் சிறைக்குப் போயிருக்க மாட்டார்.
இந்த தீர்ப்பின்படி, எந்தக் குடிமகனுக்கும் அரசாங்கத்திடம் புகார் கொடுக்க உரிமை உண்டு. அமைச்சராகவோ, பொது ஊழியராகவோ இருப்பவர் தவறு செய்தால், அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்கலாம். இந்த அனுமதியை நான்கு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தந்தாக வேண்டும்.
புகார் உண்மை என்றால், அனுமதி கொடுக்கலாம். உண்மை இல்லாத பட்சத்தில் யாருக்கும் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரியான காரணத்தைச் சொல்லியாக வேண்டும். 'நான்கு மாதங்கள் வரை எந்த முடிவையும் கூறவில்லை என்றால், அது அனுமதி கொடுக்கப்பட்டதாகவே கருதப்படும்’ என்றும் தீர்ப்பு கூறுகிறது. இனி, ஊழல் அரசியல்வாதிகள் நிம்மதியாக இருக்க முடியாது'' என்று கூறினார்.
ஜனநாயகத்துக்கு நல்ல நேரம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக