சனி, பிப்ரவரி 04, 2012

ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

  2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக்கி விசாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணி சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார். இதனால் ப சிதம்பரத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி அகற்றப்பட்டுள்ளது. ரூ 1.76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், பிரதான குற்றவாளிகளுள் ஒருவராக ப சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி ஷைனி.

இந்த வழக்கின் முடிவில்தான் சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலமே இருந்தது. எனவே தீர்ப்பைக் கேட்க ஏராளமானோர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

காலையிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிட்ட சுப்பிரமணிய சாமியை, பிற்பகல் 12.30க்கு வருமாறு நீதிபதி கூறியிருந்தார். 

இந்த நிலையில், பிற்பகல் 12.40 க்கு தீர்ப்பை அறிவித்தார் ஓ பி சைனி. 

"2 ஜி முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக சேர்க்க தேவையில்லை. இது தொடர்பா சுப்பிரமணிய சாமி தொடர்ந்துள்ள மனுவை ரத்து செய்கிறேன்," என்றார் நீதிபதி. 

இந்தத் தீர்ப்பைக் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ப சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதும், இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் அறிவித்ததும் நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக