வியாழன், பிப்ரவரி 09, 2012

வெட்கம்! வெட்கம்! – கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் கோஷம் !

imagesCABGBQ9Gபெங்களூர்:இந்திய கலாச்சாரத்தின் தூதர்களாக தங்களை அறிமுகப்படுத்தும் சங்க்பரிவார கும்பலின் பாலியல் வக்கிரங்களின் தொடர்ச்சியாக கர்நாடகா சட்டப்பேரவையில் செல்ஃபோனில் நீலப்படம் பார்த்த விவகாரம் மாறியுள்ளது. ஒழுக்கச் சீரழிவை சட்டசபைக்கு உள்ளேயே நிகழ்த்தி காட்டி நாட்டின் கண்ணியத்தை உலக அளவில் கேவலப்படுத்தியுள்ளனர்
பா.ஜ.க அமைச்சர்கள். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும் அமளி நிலவியது. எதிர்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டப் பேரவையில் செல்போனில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணபாளேமர் ஆகியோர் அமைச்சர் பதவியை புதன்கிழமை காலை ராஜினாமா செய்தனர். இதனால் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய சட்டப் பேரவைக் கூட்டம் நண்பகல் 12.20 க்கு ஆரம்பித்தது.
அவை கூடியதும் முதல்வர் சதானந்தகவுடா எழுந்து ஏதோ கூற முயன்றார். அவரைப் பேசவிடாமல் தடுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என்று கூக்குரலிட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
பேரவைத் தலைவர் போப்பையாவின் அழைப்புக்கேற்ப முதல்வர் சதானந்த கவுடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர், ‘என் அமைச்சரவை சகாக்களான லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ணபாளேமர் ஆகியோர் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவற்றை ஆளுநருக்கு அனுப்பி வைத்தேன். அவர் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்’ என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணபாளேமர் ஆகிய மூன்று பேரையும் இடைநீக்கம் செய்து, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருவதற்காக விதி-146 மற்றும் 363-ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டார். அவர் மேலும் பேசுகையில், ‘நாட்டில் எங்கும் நடக்காத வகையில் கர்நாடக சட்டப் பேரவையில் 3 அமைச்சர்கள் நீலப்படங்களை பார்த்துள்ளனர்’ என்றார். நீலப்படம் என்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக உறுப்பினர் ஈஸ்வரப்பா, இதுபற்றி விசாரணை நடத்தட்டும் என்றார்.
இதனையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மஜத உறுப்பினர் ஜமீர் அகமது மற்றும் கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இவை அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். நீலப்படம் என்று கூறியதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. யார் பேசுவதும் சரியாகக் கேட்கவில்லை.
இதனிடையே பேசிய சித்தராமையா, 3 பேரின் நடவடிக்கைகளை தற்காத்து கொள்கிறீர்களா? கர்நாடக சட்டப் பேரவையின் மரியாதை, கெளரவம், புனிதம் கெட்டுவிட்டது என்றார். சதானந்தகவுடா மற்றும் சித்தராமையா இடையே நேருக்குநேர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 12.40 மணிக்கு பேரவைத் தலைவர் அவையை அரைமணி நேரம் ஒத்தி வைத்தார்.
மறுபடியும், பிற்பகல் 1.50 மணிக்கு அவை கூடியதும் எழுந்த முதல்வர் சதானந்த கவுடா, எது குறித்தும் சர்ச்சை தேவையில்லை. எல்லாம் விதிப்படி நடக்க வேண்டும். கட்டாயத்துக்காக இங்கு எதையும் விவாதிக்கத் தேவையில்லை என்றார். அரசுக்கு எதிராக சித்தராமையா உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டப்படியே இருந்தனர். இருதரப்புக்கும் இடையே வாத, பிரதிவாதம் நடந்தது. அப்போது அவையில் அமளி நிலவியதால், மாலை 3.30 மணிவரை அவையை ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
மீண்டும் மாலை 4 மணிக்கு அவை கூடியதும் சித்தராமையா எழுந்து நீலப்பட விவகாரம் பற்றி பேசத் தொடங்கினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் சதானந்த கவுடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஆத்திரமடைந்த சித்தராமையா, முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேலும் பேரவைத் தலைவர் முன்பு கூடி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவர் போப்பையா தன்னுடைய தீர்ப்பை கூறியதோடு, இன்னும் 2 நாள்கள் மீதமிருந்த நிலையில் அவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக