வியாழன், பிப்ரவரி 16, 2012

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றன : ராஜபக்ச கவலை

இலங்கைக்கு மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து அநீதி இழைத்து வருவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமெரிக்க இராஜதந்திரிகளிடம் நேரிடையாக குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான
இராஜாங்க செயலர் ரொபேர்ட் ஓ பிளேக், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலர் மரியா ஒட்ரேரோ ஆகியோர் நேற்று முன் தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது, ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்துவது போன்று தமது அரசு நடக்கவில்லை. மனித உரிமையை நிலைநாட்டுவதில் தாம் அர்பணிப்புடன் செயற்படுவதாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ள ஜனாதிபதி,  மேற்குலகத்துடன் தொடர்ந்து நல்லுறவை பேணிவரும் இலங்கைக்கு அந்நாடுகள் தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என குறித்த ராஜதந்திரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க துணை செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு பைத்தியம் பிடித்துள்ளது எனவும், இலங்கை விடயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதற்கு அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும், இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக