புதன், பிப்ரவரி 08, 2012

திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி

 டெல்லி: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போதைய விதிகளின்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் ஆகிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணித் திறன் 30 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆய்வு செய்யப்படுகிறது. இந் நிலையில்
பொது நலன் கருதி, சிறப்பாக செயல்படாத இந்த பிரிவு அதிகாரிகளுக்கு இடையிலேயே ஓய்வு பெறச் செய்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி இனிமேல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகளின் பணித் திறன் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.

இந்த ஆய்வின்போது, குறிப்பிட்ட அதிகாரிகள் திறமையாகச் செயல்படவில்லை என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்.

அடுத்தக் கட்டமாக 25 ஆண்டுகள் அல்லது 50 வயதை நிறைவு செய்யும்போது அதிகாரிகளின் பணித் திறன் மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்.) இந்திய போலீஸ் பணி (ஐ.பி.எஸ்.) இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.

மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் கடந்த 3 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி இந்த புதிய விதிகளை வகுத்தது. இதற்கு பெரும்பான்மையான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்ததால் புதிய விதிகள் இப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதிகாரிகளை பணி நீக்கம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்தப் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என்பதும் இந்த விதிகளில் அடங்கும்.

பணிநீக்கம் செய்யப்படும் அதிகாரிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் அல்லது 3 மாத ஊதியம், படிகளை அளித்து அவர்களை பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக