செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பிரபல உருது கவிஞர் அக்லாக் முஹம்மத் கான் காலமானார்

பிரபல உருது கவிஞர் அக்லாக் முஹம்மத் கான் காலமானார்பாலிவுட் இலக்கிய படமான ‘உம்ராவோ ஜான்‘, மற்றும் ‘கமன்‘, ‘அஞ்சுமன்‘ ஆகிய படங்களில் கசல் இசை அமைத்ததன் மூலம் பிரபலமடைந்த தேசிய புகழ் பெற்ற உருது கவிஞர் அக்லாக் முஹம்மத் கான் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76.  ஷஹாரியார் என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் இவர், கடந்த  1987 ஆம் வருடம் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர். மேலும், இவர் ஞானபீட விருதையும் பெற்றுள்ளார். 

உருது மொழியில் புகழ்பெற்ற கசல் கவிஞரான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பரில்லி மாவட்டத்தில் அஒன்லா நகரில் கடந்த 1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று பிறந்த கான் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை படித்தார். 

இதனையடுத்து பிஹெச். டி. பட்டம் பெற்ற அவர் அதே பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் வருடம் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு அலிகர் பல்கலைக்கழகத்தின் உருது துறையின் தலைவராக கான் ஓய்வு பெற்றார். 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இடுகாட்டில் நாளை பிற்பகல் அக்லாக் முஹம்மத் கான் அடக்கம் செய்யப்படுவார் என்று அப்பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக