லண்டன்: பிரான்ஸின் டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்காமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக கூறியுள்ளார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். இதற்காக இந்தியாவிடம் கோரிக்கையும் வைக்கப் போகிறாராம் அவர். உலகின் மிகப் பெரிய போர் விமான கொள்முதலை சமீபத்தில் இந்தியா மேற்கொண்டது. இந்திய விமானப்படைக்காக பிரெஞ்சு நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷனிடமிருந்து டஸ்ஸால்ட் ரபேல் என்ற அதி நவீன போர் வி்மானங்கள வாங்க இந்தியா சமீபத்தில் முடிவு செய்தது.
ரூ. 50,000 கோடி அளவுக்கு இந்த விமானங்கள் வாங்கப்படவுள்ளன. மொத்தம் 126 விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் 18 விமானங்களை நேரடியாக டஸ்ஸால்ட் நிறுவனம் நம்மிடம் தயாரித்து விற்கும். மற்ற விமானங்களை இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தயாரித்து அளிக்கும். மேலும் எதிர்காலத்தில் இந்தியாவே இத்தகைய விமானங்களைத் தயாரித்துக் கொள்ளும் வகையில் 60 சதவீத தயாரிப்புத் தொழில்நுட்பத்தையும் நமக்கு டஸ்ஸால்ட் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது உலக அளவில் பல நாடுகளுக்கு பெரும் பதட்டத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. குறிப்பாக சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த டீலை கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தும் கூட இந்த டீல் குறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
காரணம், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகள் இணைந்து தயாரிக்கும் யூரோபைட்டர் டைபூன் போர் வி்மானமும் இந்தியாவின் கடைசிக் கட்ட பரிசீலனையில் இருந்தது. அதன் விலையை விட டஸ்ஸால்ட் ரபேல் விமானத்தின் விலை குறைவாக இருந்ததாலும், திறன் அதிகமாக இருந்ததாலும், இந்தியா, ரபேல் பக்கம் சாய்ந்துள்ளது. இதனால் இங்கிலாந்து கடும் ஏமாற்றமடைந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட்கேமரூன் கூறுகையில், இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு நான் இந்தியாவைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். இதற்குப் பதில் டைபூன் விமானத்தை வாங்குமாறு நான் கேட்கப் போகிறேன்.
என்னால் முடிந்த அனைத்தையும் இதுதொடர்பாக செய்யவுள்ளேன் என்றார் கேமரூன். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இப்படித் தெரிவித்தார் கேமரூன்.
மேலும் அவர் கூறுகையில் டைபூன் ஒரு அருமையான தாக்குதல் விமானம். ரபேலை விட இது திறமையானது. எனவே இதுகுறித்து இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக