மும்பை: மலையாளிகளின் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் சட்டவிரோதமாக டெபாசிட்டுகளை வசூலிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இனி மணப்புரம் பைனான்ஸ் அல்லது மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்களின் பெயரில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை வசூலிப்பது குற்றம், கடும் தண்டனைக்குரியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "விபி நந்தகுமாரை எக்ஸிக்யூடிவ் சேர்மனாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ், தனது அனைத்து கிளைகளிலும் பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்கிறது. அதற்கு, மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் எனும் பெயரில் ரசீதும் தருகிறது. மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் என்பது விபி நந்தகுமாருக்கு முழுமையாக சொந்தமான நிறுவனம். இது கார்ப்பரேட் சட்டப்படி பதிவு பெறாதது.
ரிசர்வ் வங்கி சட்டம் 45-S படி இது குற்றச் செயலாகும்.பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறி டெபாசிட் வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என அறிவித்துள்ளது.
கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ் தங்க நகைக் கடன்களைத்தான் பிரதானமாக வழங்குகிறது (இருக்கிற நகை நட்டுகளை அடமானம் வைக்க சொல்லி விக்ரம் அட்வைஸ் பண்ணுவாரே... அந்தக் கம்பெனிதான்!). ஆரம்பத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்திருந்த மணப்புரம் பைனான்ஸ், 2011-லிருந்து 'டெபாசிட் பெறாத வங்கியல்லாத நிதி நிறுவனம்' என்ற பிரிவின் கீழ் மாற்றிக் கொண்டது.
ஆனாலும் டெபாசிட் பெறுவதை தொடர்வதாக ரிசர்வ் வங்கிக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்ததால், இந்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மணப்புரம் நிதி நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தாங்கள் டெபாசிட் வாங்குவதில்லை என்றும், கடன் பத்திரங்களில் மக்களை முதலீடு செய்ய மட்டுமே கோருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பத்திரங்கள் டெபாசிட்டுகள் என்ற பிரிவில் வருவதில்லை என்கிறது இந்த நிறுவனம்.
ஏற்கெனவே பெற்ற டெபாசிட்டுகளை திருப்பிக் கொடுத்து வருவதாகவும், மீதியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனி கணக்கில் (escrow account) வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக