செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மாலத்தீவு அதிபரை 'பிடித்த' ராணுவம்- ஆட்சியையும் கைப்பறுகிறது?

Maldives President Mohamed Nasheed மாலே: மாலத்தீவு நாட்டில் தொடர்ச்சியான போராட்டங்களையடுத்து அதிபர் முகமது நசீத் பதவி விலகியுள்ளார். அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை உள்ளூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில் ராணுவப் புரட்சிக்கான சூழ்நிலை உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதி அப்துல்லா முகமதுவை மாலத்தீவு ராணுவம் அண்மையில் கைது செய்தது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்று முன்னாள் அதிபர் கயூமின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர்.

இந்த விவகாரத்தில் தீர்வு காணுமாறு ஐ.நா. சபைக்கும் கூட மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அதிபர் நசீத் பதவி விலகியுள்ளார்.

நீதிபதி விவகாரம் என்ன?:

மாலத்தீவு நாட்டின் முகமது ஜலில் அகமது என்ற எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்டு அதிபர் முகமது நசீத் அரசுக்கு எதிராக தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து முகமது ஜமில் அகமது மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி அப்துல்லா முகமது, பிடியாணை ஏதுமில்லாமல் நசீத்தை கைது செய்தது தவறு எனக்கூறி விடுதலை செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அரசு நீதிபதியை லஞ்ச குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது.

இதற்கு நீதித்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறையாகவும் வெடித்து தொடர் போராட்டங்களாக உருமாறியது.

அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிரான போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்ததால் அதிபர் நசீத் இன்று பதவி விலகியுள்ளார். துணை அதிபரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

நசீத் பதவி விலகியதைத் தொடர்ந்து தலைநகர் மாலேயில் காவல்துறையினர் அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னணியில் ராணுவம் உள்ளது.

அடுத்தது என்ன?:

ஆளும் அதிபருக்கு எதிராக ராணுவம் புரட்சியில் இறங்குவது பல நாடுகளில் நடைபெற்று உள்ளது.

மாலத்தீவிலோ அதிபருக்கு ஆதரவாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உள்ளது.

பதவி விலகிய நசீத்தை ராணுவம் தமது தலைமையகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளது.

இதையடுத்து நசீத், ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

மாலத்தீவின் முக்கியத்துவம்:

இந்திய பெருங்கடலில் மாலத்தீவு சிறு நாடாக இருந்தாலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

மாலத்தீவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன.

மாலத்தீவில் சீனா ஏற்கெனவே நீர்மூழ்கித் தளம் அமைத்து தமது நாட்டுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்லும் பாதையின் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவோ மாலத்தீவுக்கு அருகே டிகாகோ கார்சியோ தீவில் பல ஆண்டுகளாக ராணுவ தளம் அமைத்திருக்கிறது.

மாலத்தீவை அரசியல் ரீதியாக நட்பு நாடாக வைத்துக் கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக