மாலே: மாலத்தீவு அதிபர் நசீத்தின் பதவி விலகலைத் தொடர்ந்து துணை அதிபரான வகீத் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த மாதம் நீதிபதியை ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து மாலத்தீவில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களுடன் காவல்துறை கைகோர்த்தது. உச்சகட்டமாக ராணுவத்தினர் சிலரும் போராட்டத்தில் இணைந்தனர். இந்த நிலையில் அதிபர் நசீத் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அந் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய நசீத், தாம் ஆட்சியில் தொடர்ந்து நீடித்தால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். மாலத்தீவு மக்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை. இதனால் நான் பதவி விலகுவதுதான் ஒரே வாய்ப்பு என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிற்பகலில் துணை அதிபரான முகமது வகீத் ஹாசன், புதிய அதிபராக பதவியேற்றார்.
ராணுவப் புரட்சி இல்லை?
இதனிடையே நசீத்தை ராணுவம்தான் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக வெளியான செய்திகளை முகமது வகீத் ஹாசன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹாசனின் செயலாளர் அகமது தெளபீக் இது குறித்து கூறுகையில், இங்கே ராணுவப் புரட்சி ஏதும் நடக்கவில்லை. மக்களின் விருப்பத்தையே நசீத் நிறைவேற்றியுள்ளார்" என்று கூறினார்.
இந்தியா கருத்து
மாலத்தீவு அரசியல் மாற்றம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சையத் அக்பரூதீன், மாலத்தீவில் நிகழ்ந்திருப்பது அந்நாட்டின் உள்விவகாரம். மாலத்தீவுதான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். மாலத்தீவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும் அந்நாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய நசீத்
புவி வெப்பமயமாதலினால் மாலத்தீவு நாடு எதிர்வரும் ஆண்டுகளில் மெல்ல மெல்ல மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்தியா போன்ற வெளிநாடு ஒன்றில் குறிப்பிட்ட நிலத்தை வாங்கி மாலத்தீவு மக்களை குடியேற்றலாம் என்று நசீத் கருத்து தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புவி வெப்பமயமாதலின் கொடுமையை சர்வதேச சமூகம் உணர வேண்டும் என்பதற்காக கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்திக் காட்டியவர் தற்போது பதவி விலகியுள்ள நசீத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக