திங்கள், பிப்ரவரி 13, 2012

பிரதமர் கிலானி கோர்ட்டை அவமதித்து விட்டார் -பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

Gilaniஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மீதான கோர்ட்டை அவமதித்தது உண்மை. அவர் குற்றவாளி என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதம்ர் யூசுப் ராஸா கிலானி இன்று அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானார். அப்போது நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அவரை குற்றவாளி என்று அறிவித்தது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்து விட்டது. அந்த வழக்குகளை எல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டு கடந்த மாதம் 16ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது.

ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 16ம் தேதி பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்ததுடன் அவரை ஜனவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த மாதம் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து நாட்டு அதிபர்களுக்கும் அரசியல் சாசன பாதுகாப்பு உண்டு. அதற்கு சர்தாரி ஒன்றும் விதிவிலக்கல்ல. அதனால் தான் சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்தாரி வைத்திருப்பதாகக் கூறப்படும் பணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

மேலும் தனக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை ரத்து செய்யுமாறு கிலானி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நிராகரித்தார். இதையடுத்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். அதன்படி கிலானி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஏற்க மறுத்தார். மேலும் குற்றப்பத்திரிக்கைக்கு பதில் அளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் கேட்டார். மேலும் சர்தாரிக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது என்றும், சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் அவரை குற்றவாளி என்று அறிவித்தனர். மேலும் வரும் 27ம் தேதி வரை கிலானி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வருகிற24ம் தேதி நடக்கும் விசாரணையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனி கிலானி இந்த வழக்கில் குற்றவாளியாகத் தான் ஆஜராக வேண்டும். பாகிஸ்தான் வரலாற்றிலேயே ஒரு பிரதமர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது இது தான் முதல் முறை.

இந்த வழக்கில் கிலானி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை கிடைப்பதோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் எந்தவித பதவியும் வகிக்க முடியாது. ஆனால் அவருக்கு தண்டனை வழங்கபப்ட்டாலும் அதை மன்னித்து ரத்து செய்யும் அதிகாரம் சர்தாரிக்கு உண்டு என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக