புதன், ஜனவரி 11, 2012

கிலானிக்கு பாக். ராணுவம், ஐஎஸ்ஐ கடும் எச்சரிக்கை !


Kayani, Gilani and Pashaஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செயலாளர் கலீத் நயீம் லோதி திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். மேலும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ மீது பிரதமர் யூசுப் ரஸா கிலானி கடும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார். இதற்கு ராணுவமும், ஐஎஸ்ஐயும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவத் தளபதிகள் அவசரக் கூட்டத்தையும் கூட்டியுள்ளனர்.இதனால் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசேன் ஹக்கானி, அமெரிக்க அரசுக்கு எழுதிய கடிதம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் ராணுவப் புரட்சியைக் கொண்டு வந்து விட்டு விடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கும், ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. சமீப வாரங்களாக இது புகைச்சலாக இருந்து வந்த நிலையில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

சீனாவுக்குப் போயிருந்த சமயத்தில் அங்கு அளித்த ஒரு பேட்டியில், பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக நடந்து வருவதாக கிலானி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் உளவு அமைப்பையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ராணுவம் எச்சரித்துள்ளது. அதேபோல ஐஎஸ்ஐயும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ராவல்பிண்டியில் அவசரக் கூட்டம் ஒன்றை ராணுவமும், ஐஎஸ்ஐயும் இணைந்து நடத்தவுள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து ராணுவத் தளபதிகளுக்கும், ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 

பாகிஸ்தானில் எழுந்துள்ள புதிய சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

இதற்கிடையே, பாதுகாப்புத்துறை செயலாளர் கலீம் நயீம் லோதியை பிரதமர் கிலானி டிஸ்மிஸ் செய்து விட்டார். அவரது பொறுப்பை துணைச் செயலாளர் நர்கீஸ் சேத்தியிடம் அளித்துள்ளார். நயீம் லோதி ஓய்வு பெற்ற ராணுவச் லெப்டினென்ட் ஜெனரல் ஆவார்.

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் நாடு திரும்பவுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், கிலானி அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக