வியாழன், ஜனவரி 19, 2012

பர்மா தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சான் சூகி !

பர்மாவின் முன்னாள் ஜனநாயகத் தலைவரான ஆங் சான் சூகி மியான்மர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூகி விடுதலையான பின்பு பர்மாவில் நடந்த தேர்தல்களைப் புறக்கணித்தார். தற்பொழுது நாடாளுமன்றத்தின் 48 இடங்களுக்கு
எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
இதில் இவர் அதிகம் வளர்ச்சியடையாத கிராமங்களை உள்ளடக்கிய கவ்மு பகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தப் பகுதி நர்கீஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 2008ஆம் ஆண்டில் தாக்கிய இந்தப் புயல் ரங்கூன் பகுதியிலும், ஐராவதி கழிமுகப் பகுதியிலும் 1,38,000 பேரின் உயிரைப் பறித்தது.
ஜனவரி 13ம் திகதி அன்று பர்மாவின் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை பர்மா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற மேலைநாடுகள், குறிப்பாக அமெரிக்கா இனி தடையை விலக்கிக்கொள்ள முன்வந்துள்ளது. தனது தூதரை பர்மாவுக்கு அனுப்பவும் பர்மாவின் தூதரை தன் நாட்டில் ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளது. இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் தான் பர்மாவுடன் தொழில் தொடர்பு வைத்திருந்தன. இனி பர்மாவின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஏற்ப மேலைநாட்டத் தலைவர்கள் பொருளாதாரச் சலுகைகளும் அரசியல் ஆதரவும் தர சம்மதித்துள்ளனர்.
பர்மாவின் இராணுவ ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் பர்மா மீதான தனது பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்தது. இரண்டு நாடுகளுமே தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. பர்மா இந்தக் கூட்டமைப்பின் தலைவராக எதிர்வரும் 2014ஆம் ஆண்டு வரை இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக