வியாழன், ஜனவரி 19, 2012

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர் !

வினை தீர்க்கும் வேர்கள் பற்பல உண்டு. அதில் ஒருசில வேர்களின் மருத்துவப் பயன்பாடுகளை அறிவோமா? எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வாசம் உள்ள வெட்டி வேர் முதலில்!    குரு வேர், விழல் வேர், விரணம், இரு வேலி... என இதற்குப் பல பெயர்கள் உண்டு. புற்கள் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்கள் மட்டுமே மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. மேல் பகுதியில் உள்ள புற்களையும் அடிப் பகுதியில்
உள்ள வேர்களையும் வெட்டிய பின், நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும்; மீண்டும் வெட்டிவேர் செடி தானாக வளர ஆரம்பித்துவிடும். இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதாலும் 'வெட்டி வேர்’ எனப் பெயர் வந்தது.
புற்களை வெட்டி எடுத்து விட்டு, வேரை மட்டும் மண் போக நன்கு நீரில் அலசி சுத்தம் செய்து உலர்ந்த பின், மருத்துவத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
வெட்டி வேரை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டுவைத்து, தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், தலைமுடி வாசமும் வளமும் பெறுவதோடு உடல் வெப்பமும் தணியும்; முடி உதிர்தலும் நிற்கும். தலைமுடித் தைலங்களோடும் இதனைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
சுத்தம் செய்த உலர்ந்த வெட்டி வேரையும் பெருஞ்சீரகத்தையும் சம அளவு எடுத்து சூரணமாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால், வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவை தணியும்.

195 மி.கி முதல் 600 மி.கி வரையிலான வெட்டி வேரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு நீரில் ஊறவிட்டு, அந்த ஊறல் நீரை உட்கொண்டால், சுரம், நாவறட்சி, உடல் எரிச்சல் நீங்கும்.
கோடைக் காலத்தில் அறைகளின் ஜன்னல்களில் வெட்டி வேர் தட்டியைப் பயன்படுத்துவதால், அறையின் வெப்பம் தணிவதோடு நறுமணமும் குளிர்ச்சியும் புத்துணர்வைத் தரும்.
வெட்டி வேர் வாசம் இனி உங்கள் இல்லம் முழுக்க வீசட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக