ஞாயிறு, ஜனவரி 01, 2012

தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்


தானே' புயல் தாக்குதலால், கடலில் வலை வீசி மீன் பிடித்த மீனவர்கள், தற்போது, டன் கணக்கில் நிலக்கரி அள்ளுகின்றனர். கடற்கரையிலேயே அவற்றை எடை போட்டு விற்கும் பணியும், மும்முரமாக நடக்கிறது.
வங்கக் கடலில் உருவான, "தானே' புயல் கரையைக் கடந்ததால், முடங்கிக் கிடந்த மீன் பிடி தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது. கடலில் வலை வீசி மீன் பிடித்த மீனவர்கள், வடசென்னை பகுதியில், வலை வீசி நிலக்கரியை அள்ளும் வினோதம் நடந்து வருகிறது.

மீன் கிடைக்குமோ என்ற அச்சத்தோடு, காத்திருந்த மீனவர்களுக்கு நேற்று காலை முதல், கடல் அலைகளில் நிலக்கரி கிடைக்கிறது. இதையறிந்த, கடலோர மக்கள் கூட்டம் கூட்டமாக காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் குவிந்துள்ளனர்.
ஆர்ப்பரித்து வரும் அலைகளில், வலை வீசி, நிலக்கரியை அள்ளுகின்றனர். இது எப்படி வருகிறது என, மீன் வளத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னை, எண்ணூர் துறைமுகங்களுக்கு நிலக்கரி கப்பல்கள் வந்து செல்கின்றன.
நிலக்கரி இறக்கும் போது சிதறிய நிலக்கரி துகள்கள் ஆழ்கடலில் புதைந்து, தற்போது, புயல் சீற்றத்தால் வெளியே வந்துள்ளது. இதைத் தான் மீனவர்கள் சேகரிக்கின்றனர்' என்றனர்.
இதுகுறித்து மீனவர் சார்லஸ் கூறும்போது, "பல ஆண்டுகளுக்கு முன், புயல் சீற்றம் வந்த போது, இதுபோன்று பெருமளவு நிலக்கரி கரைக்கு வந்தது.
பத்து நாட்களுக்கும் மேலாக நிலக்கரி சேகரித்து விற்றோம்' என்றார். கரையிலேயே விற்பனை மீனவர்கள் வலை வீசி நிலக்கரி சேகரிக்கும் தகவலறிந்த வியாபாரிகள், கரையோரத்திலேயே எடைபோடும் இயந்திரத்துடன் கடை போட்டனர்.
மீனவர்கள் சேகரித்த நிலக்கரியை மூட்டை மூட்டையாக வியாபாரிகளிடம் கொடுத்தனர். கிலோ 1.50 ரூபாய் என்று விலை வைத்து வியாபாரிகள் வாங்கினர்.
வியாபாரி ஒருவர் கூறும் போது, "அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தும் நிலக்கரி தான் இது. மீனவர்களிடம் இவற்றை வாங்கி, சிறு தொழில் நிறுவன பாய்லர்கள், செங்கல் சூளைகள், டீக்கடைகளுக்கு, கூடுதல் விலை வைத்து விற்போம்' என்றார்.
"தானே' புயலுக்குப் பின், கடலில் மீன் கிடைக்குமா என்று புலம்பிய நிலையில், அலையில் நிலக்கரி கிடைப்பது ஒரு வகையில், மீனவர்களுக்கு மகிழ்ச்சி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக