வெள்ளி, ஜனவரி 20, 2012

பங்களாதேஷ்:அரசை கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிப்பு !

Brigadier General Muhammad Masud Razzaq talks during a media briefing in Dhaka Januaryடாக்கா:ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்ற சில உயர் ராணுவ அதிகாரிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் சில தீவிர சிந்தனையை கொண்ட பதினாறுக்கும் மேற்பட்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர்
மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009-ஆம் ஆண்டு ராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு ராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதுத்தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: மிகவும் மோசமான ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சில தீவிர இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உள்ளனர். நாட்டின் வெளியே வாழும் சில பங்களாதேஷைச் சார்ந்தவர்களின் தலைமையில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரிகளான லெஃப்.கர்னல் இஹ்ஸான் யூசுஃப், மேஜர் ஸாக்கிர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷை விட்டு வெளியேறிய போர் குற்றவாளி ஓய்வு பெற்ற மேஜர் ஷியாவுல் ஹக்கை குறித்து விசாரித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு ஷேக் ஹஸீனா வெற்றி பெற்று பிரதமரானவுடன் நடந்த ராணுவ கலவரத்தில் 74 கமாண்டர்கள் கொல்லப்பட்டனர்.
ஸ்திரமற்ற சூழல் நிலவும் பங்களாதேஷில் இரண்டு அதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 19 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்தேறியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக