செவ்வாய், ஜனவரி 17, 2012

இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள், டோணி செயலற்றவர்: ஆஸி பத்திரிக்கைகள் தாக்கு !

Dhoni
 பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உலகிலேயே வலுவான கிரிக்கெட் அணியாக இருந்த இந்திய அணி தற்போது ஆட்டம் கண்டுபோயுள்ளது. திறமையான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணியில் யாரும் விளையாடவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள். எதிரணியின் பந்து வீச்சாளர்களை பயப்பட வைத்த லட்சுமன் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்துவிட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஷேவாக், அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் டோணியின் பேட்டிங் ஜொலிக்கவில்லை. அவர் தனது அணியை ஊக்குவிக்கவில்லை. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

செயலற்ற கேப்டன்:

இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள கேப்டன்களில் மிகவும் மந்தமான, செயலற்றவராக டோணியைக் குறிப்பிடலாம். இவர் தாமதமாக செயல்பட்டதால் பலபோட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களான வார்னர், கோவன் இணைந்து 88 ரன்கள் சேர்த்த பிறகே வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை களமிறக்கினார்.

3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த உமேஷ் யாதவை, கேப்டன் டோணி உள்பட இந்திய வீரர்கள் யாருமே பாராட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'தி டெய்லி டெலிகிராப்' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,

தாமதமாக பந்துவீசிய சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கேப்டன் டோணி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தவித்து வரும் இந்திய அணிக்கு மேலும் சிக்கலாகி உள்ளது.

'பார்ம்' இல்லாமல் தவித்து வரும் ஷேவாக் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆஸ்திரேலியாவில் ஷேவாக் தற்போது ஆடியுள்ள 3 போட்டிகளின் மொத்த சராசரி 19 ரன்கள் தான். தனிப்பட்ட முறையில் ரன் சேர்க்க தவித்து வரும் அவர் எப்படி அணியை வழிநடத்துவார்.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சராசரியாக 47.08 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 22.9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் 4 பேர் 134 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஆனால் இந்திய அணியில் ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 83 ரன்களை எடுத்தார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து 'ஹெரால்டு சன்' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி அடைந்த சரிவில் இருந்து தற்போது மீண்டு வருகின்றது. அந்த அணியின் புதிய பயிற்சிக் குழு சிறப்பாக செயல்படுகின்றது. போட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த அணி கவனம் செலுத்தியது.

ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்திய வீரர்கள், பயிற்சி நேரங்களில் வீணாக பொழுதை போக்கினர். பெரும்பாலான நேரம் இந்திய வீரர்கள் மரங்களின் நிழலில் தான் கழித்தனர் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. அப்போது இதேபோல இந்திய அணியை படுதோல்வி பெற செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை படுதோல்வி அடைய செய்துள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு மைக்கேல் கிளார்க் புத்துயிர் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக