திண்டுக்கல்: தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு என்ற தலித் அமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் நேற்று இரவு திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஒரு கும்பலால் கழுத்தை அறுத்தும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இதனால் தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது. பரமக்குடியில் தலித் மக்கள் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவமே இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாத நிலையில் தலித் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தென் மாவட்ட தலித் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன் (55). இவரது வீடு திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள நந்தவனம்பட்டியில் உள்ளது.
வழக்கமாக பசுபதிபாண்டியன் தனியாக இருக்க மாட்டார். கூடவே பத்து பதினைந்து பேர் இருப்பார்கள். ஆனால் நேற்று இரவு பசுபதிபாண்டியன் தனது வீட்டில் தனியாக இருந்தார்.
இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகேயுள்ள காலியிடத்தில் சேரில் அமர்ந்து இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவரை சூழ்ந்து கொண்டது. செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பசுபதிபாண்டியன் சுதாரித்துக் கொள்வதற்குள், அந்த கும்பல் தாக்குதல் நடத்தினர்.
அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றால் அந்த கும்பல் பசுபதிபாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் அவரது உடலில் வயிறு, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயமும், கத்திக்குத்து காயமும் ஏற்பட்டது. கழுத்தையும் கத்தியால் அறுத்துள்ளனர். இதில் சுருண்டு விழுந்த பசுபதிபாண்டியன் சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
உடனடியாக போலீசுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலும் பசுபதி பாண்டியன் மீது நிறைய வழக்குகள் உள்ளன. கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூலக்கடை பண்ணையார் கொலை வழக்கிலும் இவருக்குத் தொடர்பு உள்ளது. இந்த மூலக்கடை பண்ணையாரின் மகன்தான் வெங்கடேஷ் பண்ணையார். இவர் சென்னையில் போலீஸாரால் சுட்டுக கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுபதி பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருடைய மனைவி வக்கீல் ஜெசிந்தாபாண்டியன். திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெசிந்தா பாண்டியன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார்.
பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக