இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் தனக்கு உரிய பதவியை அளிக்கவேண்டும் என பா.ஜ.க தலைமைக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடியூரப்பா பதவி விலக நேர்ந்தது. இந்நிலையில் தனக்கு உரிய பதவியை வழங்கக்கோரி அவர்
பா.ஜ.க மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் பதவியில் இருந்து விலகிய அன்று முதலே மற்றொரு பதவிக்காக காய்களை நகர்த்தி வருகிறார் எடியூரப்பா. பா.ஜ.கவின் மத்திய தலைமை பொருத்தமான முடிவை மேற்கொள்ளும் என தான் நம்புவதாக எடியூரப்பா கூறுகிறார். கோரிக்கையை பா.ஜ.க மத்திய தலைமை அங்கீகரிக்காவிட்டால் புதிய கட்சியை எடியூரப்பா துவங்குவார் என்ற செய்தி வெளியான சூழலில் எடியூரப்பா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
அபாயத்தை உணர்ந்த பா.ஜ.கவின் மத்திய தலைமை எடியூரப்பாவை சமாதானப்படுத்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.அசோகாவின் தலைமையில் எம்.எல்.ஏக்களின் குழு ஒன்றை அனுப்பியது. எடியூரப்பாவை சந்தித்த குழுவினர், அரசியல் எதிர்காலம் குறித்து அவசரத்தில் எந்த முடிவையும் மேற்கொள்ளவேண்டாம் என அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்த போதிலும் நம்பிக்கைக்கு உரிய சதானந்த கவுடாவை முதல்வர் பதவிக்கு சிபாரிசுச் செய்தார் எடியூரப்பா. ஆனால், முதல்வர் பதவியை ஏற்ற பிறகு சதானந்தா கவுடா எடியூரப்பாவின் உத்தரவு படி செயல்படவில்லை என கூறப்படுகிறது.
மீண்டும் முதல்வர் பதவி அல்லது மாநில கட்சி தலைவர் பதவி என்பதுதான் எடியூரப்பாவின் கோரிக்கையாகும். ஆனால், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் காங்கிரஸுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க ஊழல் வழக்கில் சிக்கிய எடியூரப்பாவிற்கு ஏதேனும் பதவியை வழங்கமுடியாமல் தடுமாறுகிறது.
கர்நாடகா பா.ஜ.கவில் உட்கட்சி போர் வெடித்து கட்சி பிளவு படும் அறிகுறியை எடியூரப்பாவின் எச்சரிக்கை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக