புதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என கூறியுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார். ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்ட சம்பவம் உண்மையாக இருக்கும் வேளையில் மறு விசாரணை தேவையில்லை
என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி தேசத்தை உலுக்கிய பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் அரங்கேறியது. டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாட்லா ஹவுஸில் போலீஸின் போலி என்கவுண்டரில் ஒரு மாணவர் உள்பட இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.
டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார். உ.பி மாநிலத்தின் ஆஸம்கர் மாவட்டத்தில் சஞ்சர்பூர் கிராமத்தைச் சார்ந்த ஆதிஃப் அமீன், முஹம்மது ஸாஹித் ஆகிய இளைஞர்கள்தாம் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
எம்.சி.சர்மா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்ட இச்சம்பவம் போலி என துவக்கம் முதலே குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய விசாரணையில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், என்கவுண்டர் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவது போலீஸாரின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும் என கூறி மத்திய-மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
தான் மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் உண்மை என்பது தெளிவானது என வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திக்விஜய்சிங் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என ப.சிதம்பரம் கூறினார். அதேவேளையில், பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என மீண்டும் திக்விஜய்சிங் கூறியுள்ளார். இச்சம்பவத்தை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் பிரதமரும், ப.சிதம்பரமும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக