வியாழன், ஜனவரி 12, 2012

ரயில் மீது பெற்றோல் குண்டு வீச்சு: பசுபதிபாண்டியன் கொலையின் எதிரொலி! தென்மாவட்டங்களில் பதற்றம் !


பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன.  தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார்.
அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து
தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
நேற்று பசுபதி பாண்டியனின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முருகம்பட்டியை கடந்த போது அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின. கண்டக்டர் ஒருவர் காயமடைந்தார்.
மதுரை புதூர் அருகே கும்பல் கல்வீசி யதில் 3 டவுன் பஸ்கள் சேதமடைந்தன.  இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து பெருமளவில் குறைக்கப்பட்டன. புறநகரில் ஊமச்சிகுளம், ரிங்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் 5 பஸ்கள் உடைக்கப்பட்டன.
விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் நேற்று காலை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.
பதற்றம் காரணமாக அருப்புக்கோட்டையிலிருந்து பாலவநத்தம் வழியாக விருதுநகர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. தேனி: தேனி மாவட்டத்தில் தேவாரம், கண்டமனூர் பகுதிகளில் பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் ஒரு பயணி காயமடைந்தார்.
தேனியில் இருந்து வருசநாடு, கண்டமனூர் வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல, சின்னமனூர், தேவாரம் செல்லக்கூடிய பஸ்கள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டன.
வெளியூர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சேர்த்தே அனுப்பப்பட்டன. சிவகங்கை: சிவகங்கையிலிருந்து வெளியூர் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர்.
காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, தேவகோட்டை வழித்தடங்களுக்கு பஸ்கள் இயக்கப் படவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர். மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை தொடர்ந்தது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நேற்று முன்தினம் இரவு மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் மீது சிலர் கல்வீசி, கண்ணாடிகளை நொறுக்கினர். திருவெற்றியூரில் இருந்து திருவாடானை நோக்கி சென்ற அரசு பஸ் கல்வீச்சில் சேதமடைந்தது.
பரமக்குடி ஐந்துமுனை சாலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 அரசு டவுன் பஸ்கள், 2 தனியார் பஸ்கள், ஒரு லாரி கல்வீச்சில் சேதமடைந்தன.  இதேபோல் கமுதியில் இருந்தும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடியில் 10 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன. பஸ் சேவை முடங்கியதால் பயணிகள் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
 குமரியில் இருந்து  வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதே போல் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டிய இரவு நேர பஸ்களும் வர வில்லை.

ரயில் மீது  குண்டு வீச்சு: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 12.05 மணிக்கு கிளம்பியது. நள்ளிரவு 1.37 மணியளவில் பரமக்குடி ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலின் கடைசி பெட்டியில் பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி தப்பிச்சென்றனர்.

இதில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. ஸ்டேஷனில் நின்ற ரயில் கார்டு பாண்டியன், பெண் பயணிகள் அலறினர். இதனையடுதது அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த பயணிகள், ஸ்டேஷன் பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
வாகனங்கள் மீது தாக்குதல் : பசுபதிபாண்டி யன் உடல் கொண்டு வரப்பட்ட வாகனத்துடன் வந்த அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் வந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதும், ஆங்காங்கே திறந்திருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட பகுதிகளில் தனியார் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பரோலில் வந்த பசுபதி பாண்டியன் தம்பி


பசுபதிபாண்டியனின் தம்பி தாமோதரன் 2 வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பசுபதிபாண்டியன் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பரோலில் விடுமுறை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி அவருக்கு ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதி அளித்தார். இதையடுத்து தாமோதரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு பசுபதி பாண்டியன் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

* மதுரை, நெல்லை, தூத்துக்குடி என்று தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
* பசுபதி பாண்டியன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட வழிகளில் எல்லாம் பஸ்கள் உடைக்கப்பட்டன.
* அடக்கம் செய்தபோதும், தூத்துக்குடியில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக