ஞாயிறு, ஜனவரி 08, 2012

பத்திரிக்கை சுதந்திரமும் நக்கீரன் தாக்குதலும் !


இன்றைய தலைப்புச் செய்தியாக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. விசயம் என்னவென்றால் முதல்வர் ஜெயலலிதா, மாட்டுக்கறி உண்பவர் என்ற செய்தியை சற்று விசமத்தனமாக "மாட்டுக்கறி உண்ணும் மாமி" என்று வால்போஸ்டரில் வெளியிட்டிருந்ததால் உணர்ச்சி வசப்பட்ட சிலர் நக்கீரன் அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்கனவே தன்னை "பாப்பாத்தி" அதாவது பிராமண ஜாதியைச் சார்ந்தவர் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். பெரும்பாலான இக்கால பிராமண ஜாதியினர் (அமெரிக்காவில் KFC, மக்டொனால்ட் விரும்பி சாப்பிடும் பிராமண சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை அறிவேன் என்பதால் பெரும்பாலான என்பதே சரி) புலால் உணவுகளை உண்ண மாட்டார்கள் என்பது பரவலான புரிதல். இந்நிலையில் நக்கீரன் இதழ் நாகரிகமின்றி தலைப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

உண்மையான தகவலாகவே இருந்தாலும் சமூக பொறுப்புள்ள ஓர் பத்திரிக்கை அவ்வாறு தலைப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நமது ஜனநாயகம் எந்தளவுக்குக் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறதோ அதே அளவுக்கு அதன்பேரில் சொல்லப்படும் அவதூறுகளையும் சட்டரீதியில் எதிர்கொள்ளலாம். மட்டுமின்றி பிரஸ் கவுன்ஸிலிலும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் அதன் பொறுப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் முடியும். இதைவிடுத்து, கல்வீசி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சியாக இருக்கும் ஓர் அரசியல் கட்சியின் தொண்டர்கள் எந்தச்சூழலிலும் எல்லைமீறாமல் நடந்து கொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான நக்கீரன் பத்திரிக்கையின்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக கட்சியின் அமைப்புச் செயலர் திரு.பொன்னையன் தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கமிருக்க, திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் நக்கீரன் அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார். பின்னணியில் அதிமுகவைச் சாடும் வாய்ப்பாகவே கருணாநிதியின் கண்டனத்தைக் கருதப்படுகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தன் வாரிசுகளுக்கிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டபோது அதன் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதோடு, மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதையும் நினைவுகூற வேண்டும்.

மாட்டுக்கறி சாப்பிடாத ஒருவரை, மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுபவர் என்று சொல்வது தாக்குதல் நடத்துமளவுக்குக் கொடுமையான சொற்பிரயோகமல்ல. எனினும், அவ்வாறு திட்டமிட்டே ஒருவரை இழிவு படுத்தும் நோக்கத்தில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்பதோடு இதே அளவுகோலைத் தற்போது கண்டிக்கும் திமுக மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் அதிமுக ஆகிய கட்சிகள், முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று இதே பத்திரிக்கைகள் பக்கம்பக்கமாக அவதூறாக எழுதியபோது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணரவேண்டும்.

மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்பதே தாக்குதல் நடத்துமளவு உணர்வுகளைத் தூண்டக்கூடிய சொல்லாடல் எனில், ஒரு சமூகத்தையே குற்றப்பரம்பரையாகச் சித்தரிக்கும் கருத்துப் பிரயோகங்கள் எந்தளவுக்கு அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தற்போது பத்திரிக்கை சுதந்திரம், தாக்குதல் குறித்து பேசுபவர்கள் உணர்ந்து சமூகப்பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதே எம்போன்றவர்களின் அவா



1 கருத்து:

  1. நல்லா சொன்னிங்க ஆசிய நன்பன்
    மாமி மாட்டுகறி தின்றுதான் பெறுசா இருக்கு உன்மையைதான் எளுதிறுக்கு நாக்கீறன்

    பதிலளிநீக்கு