வெள்ளி, ஜனவரி 13, 2012

ஆப்பிள் ஐபோன் 4S வாங்க அடிதடி-சீனாவில் கலவரம்!


iPhone 4sபெய்ஜிங்: சீனாவில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 4எஸ் வாங்க பெரும் கூட்டம் கூடி அது கலவரத்தில் முடிந்ததால் விற்பனையை நிறுத்தி விட்டது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதை வாங்குவதற்கு பெருமளவில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

குறிப்பாக பெய்ஜிங்கின் கிழக்கில் உள்ள சான்லிதுன் என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபலக் கடை முன்பு நேற்று இரவு முதலே நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். ஆனால் இன்றுகாலை 7 மணி வரையிலும் கடை திறக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்தவர்கள் அடிதடியிலும், கலவரத்திலும் இறங்கினர். அந்த கடையின் மீது சரமாரியாக முட்டைகள், கற்களை வீசி பெரும் ரகளையில் இறங்கினர்.

இரவு முழுவதும் நடுங்கும் குளிரில் காத்திருந்தும் கடை திறக்கப்படாததால் அவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். இதனால் அங்கு கலவரத் தடுப்புப் போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அப்படியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கலவரத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவில் ஐபோன் 4எஸ்-ஸின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு ஐபோன் 4எஸ் இங்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக விற்பனை நடைபெறும் என்றும் அது அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக