வியன்னா: உலகம் முழுவதும் 2011 ஆண்டு 103 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மெக்ஸிகோ நாட்டில் 10 பலியாகியுள்ளனர் என்று ஐ.பி.ஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட், பத்திரிக்கையாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அளிக்கிறது.இந்த அமைப்பு அளித்துள்ள அறிக்கையின் படி, பத்திரிகை உட்பட மீடியாக்களில் பணிபுரிவோர்களுக்கு பாதகமான நாடாக மெக்ஸிகோ விளங்குவதாக தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 103 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோவில் 10 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒன்பது பேர் ஈராக்கில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்,
பாதுகாப்பற்ற நாடுகள்
உலகில் உள்ள நாடுகளில் ஹோண்டுராஸ், பாகிஸ்தான், ஏமன், லிபியா, பிரேசில், போன்ற நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் நடைபெறும் சம்பவங்களை செய்தியாக வெளியிட்டதற்காகவே இந்த கொலைச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் மீது ஒரு சில இடங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவு பத்திரிக்கையாளர்கள் கொலையானது 2009ம் ஆண்டில்தான். அந்த ஆண்டில் மட்டும் 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக